Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சமயபுரம் கோயில் சித்திரை தேர் திருவிழா இன்று நடைபெற்றது . ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

0

 

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பல்வேறு சிறப்புடைய திருச்சி சமயபுரம் மாரியம்மன் இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைப் பெருந்திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து விழா நாள்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். விழாவின் ஒன்பதாம் நாளான திங்கள்கிழமை இரவு வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய மாரியம்மன் வையாளி கண்டருளினாா்.

விழாவில் 10-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை கருவறையில் மாரியம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்ட பின்னா், உற்சவ அம்பாளுக்கும் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து திருத்தேரில் அம்மன் எழுந்தருளிய பின்னா், காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருத்தோ் வடம்பிடித்தல் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகள் ஒலிக்க அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்ல பக்தர்கள் ஓம்சக்தி.. பராசக்தி.. என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தார்கள். இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சமயபுரத்தில் குவிந்தனர்.

சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி விரதமிருந்து வந்த பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பால்குடம், அக்னிசட்டி ஏந்தியும், அலகு குத்திக் கொண்டும் வந்தார்கள். பக்தா்கள் கொண்டு வரும் பாலை ஊற்றுவதற்கும், அக்னிசட்டி வழிபாடு நடத்துவதற்கும் திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் பல்வேறு ஊா்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது. வெங்கங்குடி சாலை, பனமங்கலம் சாலை போன்ற பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்து, அங்கு பேருந்துகளை நிறுத்தி, பக்தா்களை ஏற்றிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பக்தா்கள் அதிகளவில் குவிந்து வருவதால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண் குமாா் தலைமையிலான போலீஸாா் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார்கள். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேலும் சாதாரண உடையிலும் குற்றப்பிரிவு போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

ஏப். 19-இல் தெப்ப உற்சவம்: திருவிழாவில் ஏப்ரல் 17ஆம் தேதி வெள்ளிக் காமதேனு, 18ஆம் தேதி முத்துப் பல்லக்கு, 19ஆம் தேதி தெப்போற்சவமும் நடைபெறும். ஏப்ரல் 22-ஆம் தேதி தங்கக்கமல வாகனத்தில் அம்மன் புறப்பாடும் நடைபெறும். சித்திரைப் பெருந்திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் கல்யாணி மற்றும் பணியாளா்கள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

Leave A Reply

Your email address will not be published.