Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் . அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் தேர்தல் அறிக்கை.

0

திருச்சி மக்களவைத்தொகுதியில் வெற்றி பெற்றால் காவிரி}வைகை- குண்டாறு இணைப்பு உள்ளிட்ட நீர்மேலாண்மை திட்டங்கள் மேம்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள அமமுக வேட்பாளர் ப. செந்தில்நாதன்.

திருச்சியில் அமமுக (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்) சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதிக்கு என்று தனியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு அக்கட்சி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. நிகழ்வின்போது அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது…

திருச்சி மாநகராட்சி உறுப்பினராக இருந்த நான் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதனை விரிவுபடுத்தும் விதமாக தற்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறேன். தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் திருச்சி மக்களவைத் தொகுதிக்கு என்ன செய்யப் போகிறோம், எனது குரல் என்னவாக ஒலிக்கப் போகிறது என்பதை தெரியப்படுத்தும் விதமாக இந்த தேர்தல் அறிக்கை இருக்கும்.

திருச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களவைத் தொகுதி (பிரதிநிதி) உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்படும். அதில் வாரத்தின் இரண்டாம் செவ்வாய்க்கிழமையன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் 6 அலுவலகங்களிலும் சுழற்சி முறையில் நடத்தப்படும்.

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளில் 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பசுமை பூங்காவும் அமைக்கப்படும்.
மத்திய அரசு தொழிற்சாலைகள் திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் புதிதாக நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி பால் பண்ணை திருவெறும்பூர் சாலையில் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணப்படும் அல்லது உயர் மட்ட பாலம் அமைக்கப்படும்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் நல மையம் அமைக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஸ்மார்ட் சிட்டியாக விரிவாக சாத்திய கூறுகள் குறித்த ஆய்வு செய்யப்படும்.

கந்தர்வக் கோட்டையில் விளையும் முந்திரிகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விவசாயிகளின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும். திருச்சி முதல் பெங்களூர் வரை செல்லும் அதிவேக விரைவு ரயில் கூடுதலாக ஒன்றும் புதுக்கோட்டை தஞ்சாவூர் புதுக்கோட்டை பெங்களூர் மற்றும் புதுக்கோட்டை கோயம்புத்தூர் ஆகிய வழித்தடங்களில் மேலும் விரைவு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிரி ஆற்றில் மணல் எடுப்பதை தடுத்து நீர் நிலைகளில் நில அளவு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகள அகற்றப்பட்டு தூர்வாரி நீர் கொள்ளளவு அதிகரிக்க வழிவகை செய்யப்படும். காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை துரிதப்படுத்தி பாரபட்சம் பார்க்காமல் சமநிலை போற்றி மிக விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் செந்தில்நாதன்

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட செயலாளர் ராஜசேகரன், முன்னாள் மாநகராட்சி மேயர் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்டோர் கலந்து கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.