Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணப்பாறை: பொன்னர் – சங்கர் மாசி பெருவிழாவில் இன்று தங்கைக்கு கிளி பிடித்து கொடுக்கும் நிகழ்ச்சி . நாளை வீரப்பூரில் வேடப்புரி நிகழ்ச்சி

0

 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை சுற்றுவட்டார பகுதியில் அண்ணன்மார் தெய்வங்கள் என்று என்அழைக்கப்படும் பொன்னர் – சங்கர் வீரவரலாற்று சரித்திரம் நடைபெற்ற பகுதிகளில் கோவில்கள் உள்ளன.

இந்த கோவில்களை கொங்கு நாட்டு மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இக்கோவில்களில் பொன்னர் – சங்கர், கன்னிமாரம்மன், மந்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பண்ணசாமி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவில்களில் மாசிப் பெருந்திருவிழா நடைபெறும். புகழ் பெற்ற இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் இதில் கலந்து கொள்வார்கள்.

இதே போல் இந்த ஆண்டும் திருவிழா கடந்த 9 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் வளநாடு, படுகளம், வீரப்பூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும். முக்கிய திருவிழாவின் தொடக்கமாக இன்று அண்ணன்மார் கோட்டை கட்டி ஆட்சிபுரிந்த வளநாட்டில் பொன்னர் – சங்கரின் தங்கையான தங்காள் விளையாட கிளி வேண்டும் என அண்ணன்களிடம் கேட்டதால் தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பொன்னர் – சங்கர் கோவில் அருகே உள்ள கோவில் குளத்தில் உள்ள மரத்தின் மீதேறி தங்காளுக்கு கிளி பிடித்துக்கொடுக்கும் வரலாற்றை நினைவு படுத்தும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது.

இதில் அண்ணன்மார் என்றழைக்கப்படும் சங்கர் வேடமிட்டவர் மரத்தின் மீதேறி தங்காளாக வரும் சிறுமிக்கு கிளியை பிடித்துக் கொடுத்தார். இந்த ஐதீக நிகழ்வை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமிகளை வழிபட்டனர்.

முன்னதாக ஆட்டம், பாட்டம் உற்சாகம் என அந்த பகுதியை களைகட்டியது. விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த திருவிழாவின் தொடர்ச்சியாக இன்று நள்ளிரவு படுகளத்தில் உள்ள பொன்னர் – சங்கர் கோவிலில் அண்ணன்மார் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் எனும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

நாளை வீரப்பூரில் வேடபரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

 

 

Leave A Reply

Your email address will not be published.