Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பழுது சீரமைக்கப்பட்டு ஜி கார்னர் ரயில்வே பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்.

0

 

பழுது சீரமைக்கப்பட்டு
பொன்மலை ரயில்வே பாலத்தில்
போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

திருச்சி பொன்மலை ரயில்வே பாலத்த்தில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் போக்குவரத்து தொடங்கியது.
அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பாலத்தை திறந்து, போக்குவரத்தை தொடங்கி வைத்தனர்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஒருபகுதியில் பழுது ஏற்பட்டிருந்தது கடந்த ஜனவரி 12-ந் தேதி தெரியவந்தது. இதையடுத்து சென்னை ஐ.ஐ.டி யைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் தொழில் நுடப்ப வல்லுநர்கள் கொண்ட குழுவினர் ஆலோசனையின் பேரில், பாலத்தில் பழுதடைந்த பகுதியில் சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டது. சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள முக்கிய பாலம் இது என்பதால், அருகிலிருந்த மற்றொரு பாலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. என்றாலும் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் நிலவி வந்தது.
இந்நிலையில் சுமார் 60 நாள்களைக் கடந்து சீரமைக்கும் பணிகள் அண்மையில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து சென்னை ஐஐடி பேராசிரியர் அழகுசுந்தரம் தலைமையிலான வல்லுநர் குழுவினர் பாலத்தில் நிறைவடைந்த பணிகள் மற்றும் உறுதித் தன்மையை அண்மையில் ஆய்வு செய்தனர். பாலத்தின் கீழ்பகுதியில் ஒரு சென்சார் கருவி பொருத்தப்பட்டு, பாலத்தின் மேல்பகுதியில் 30 டன் எடையுடன் பொருள்ளைக் கொண்ட ஒரு லாரியை இரவு முழுவதும் நிறுத்தி வைத்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு முடிவில் பாலத்தின் உறுதித்தன்மை ஸ்திரமாக இருப்பதை உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் பாலத்தில் மீண்டும் போக்குவரத்தை அனுமதிக்க நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்து அறிவித்துள்ளது.

அதன்படி பாலத்தில் அனைத்து வாகனங்களும் நேற்று காலை முதல் பாலத்தில் அனுமதிக்கப்பட்டது.

ஜி. கார்னர் ரெயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கலெக்டர் பிரதீப் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி,மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி. திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன். மண்டல குழு தலைவரும், மாநகர செயலாளருமான மதிவாணன், பகுதி செயலாளர் கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ்,பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ். பகுதி செயலாளர் மோகன்தாஸ், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம் மற்றும் திரளான நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் பாலம் மீண்டும் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்ததனால் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் இருந்து அரியமங்கலம் பழைய பால்பண்ணை பகுதி வரை தினமும் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு கிடைத்துள்ளது.

இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் எந்தவித சிரமமும் இன்றி ஜி-கார்னர் ரயில்வே மேம்பாலத்தை கடந்து சென்றது. பாலம் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் போக்குவரத்து பயன்பாட்டிற்கு வந்ததையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.