Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சனாதனம் பற்றிய உதயநிதியின் சர்ச்சை பேச்சு. கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளீர்கள். உச்சநீதிமன்றம் .

0

சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர், “சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்” என்று பேசினார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு தேசிய அளவில் விவாதங்களை கிளப்பியது. அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், தான் பேசிய கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.

அதேசமயம், உதயநிதி ஸ்டாலின் மீது உச்ச நீதிமன்றம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில், இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீங்கள் ஒரு சாதாரண நபர் கிடையாது. ஒரு அமைச்சர். உங்களது பேச்சினால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தது. மேலும், நீங்கள் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறீர்கள் பிறகு தற்போது பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறீர்கள் எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் 9.64 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: ராகுல் காந்தி!

இதையடுத்து, சனாதனம் தர்மம் தொடர்பான வழக்கில் வழக்கை எதிர்கொள்ள மாட்டேன் என்று சொல்லவில்லை; மாறாக அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.

“நான் பேசியதன் விளைவை நன்கு அறிவேன். 6 மாநிலங்களில் வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. எல்லா மாநிலங்களுக்கும் என்னால் செல்ல முடியாது. பொதுவான ஒரு இடத்தில் விசாரிக்க வேண்டும், விசாரணையை எதிர்கொள்ள நான் தயார்.” எனவும் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், பத்திரிக்கையாளர்கள் அர்ணாப் கோஸ்வாமி முகமது ஜுபைர், பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா ஆகியோருக்கு எதிராக பல மாநிலங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது உச்ச நீதிமன்றம் அந்த அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்குகளாக மாற்றி இருந்தது. அதேபோல தனது சனாதனம் தர்மம் குறித்த பேச்சுக்கு எதிரான வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலின் மனு மீதான விசாரணையை மார்ச் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Leave A Reply

Your email address will not be published.