Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நத்தம் விஸ்வநாதன் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு . தேர்தல் நெருங்கும் நேரத்தில் பரபரப்பு.

0

 

முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது தொடரப்பட்ட மோசடி வழக்கு விசாரணையை எம்பி, எம்எல்ஏ-க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி கே.கே நகர் ஈவேரா சாலை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 61). ரியல் எஸ்டேட் அதிபரான இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் இருத்தரைப்பட்டியில் 80 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்தவர் நத்தம் விஸ்வநாதன். இவர் சூரிய மின் சக்தி திட்டத்துக்காக அதிகபரப்பளவில் நிலம் தேடி வந்துள்ளார். அத்திட்டத்துக்கு லோகநாதனுக்கு சொந்தமான 80 ஏக்கர் நிலம் உகந்ததாக இருக்கும் என கருதினர். உடன் நத்தம் விஸ்வநாதனின் நண்பரான காமராஜ் என்பவர் மூலம் லோகநாதனிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதில் லோகநாதனின் 80 ஏக்கர் நிலம் உட்பட, அந்த நிலத்தை சுற்றி இருக்கும் 120 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்தி கொடுக்கும்படி லோகநாதனிடம் தெரிவித்துள்ளனர். லோகநாதனின் நிலத்துக்கு 4.5 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பணமாக ரூ.25 லட்சம் வழங்குவதாக பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி முதல் தவனையாக ரூ.18 லட்சம் ரொக்கமாகவும், 5 லட்சத்துக்கு காசோலையும் வழங்கியுள்ளனர். பெரிய வியாபராமாக கருதிய லோகநாதன், தன் கையில் இருந்த பணம் மேற்கொண்டு 40 லட்சம் வரை செலவு செய்து அக்கம், பக்கத்து நிலத்துக்காரர்களுக்கு முன்பணம் கொடுத்துள்ளார். இதற்கிடையில் அவர்கள் வழங்கிய காசோலையை வங்கியில் செலுத்திய போது, பணம் இல்லை என செக் திரும்பியுள்ளது. அதோடு லோகநாதனுக்கு சொந்தமான நிலத்துக்குரிய மீதித்தொகையை வழங்காமல் அவரிடம் நிலத்தை எழுதி கொடுக்கும்படி கேட்டுள்ளனர். அவர் அவ்வாறு எழுதி கொடுக்க சம்மதிக்கவில்லை. இந்நிலையில் லோகநாதன முன்பணம் செலுத்தியிருந்த நிலத்தின் உரிமையாளர்களிடம் அவர்கள் தனியாக பேசி நிலத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவரங்கள் லோகநாதனுக்கு தெரியவந்துள்ளது. எனவே., அவர் மற்றவர்களிடம் கொடுத்த முன்பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதில் இருதரப்புக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் லோகநாதனின் திருச்சியில் உள்ள வீட்டுக்கு அடிக்கடி ரௌடிகள் வந்து அவரை மிரட்டுவதும், வீட்டு கேட்டை அடித்து உடைப்பதுமாக தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் அவர் வீட்டு கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரங்களுடன் லோகநாதன், திருச்சி கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் புகார் மீது போலீஸர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து லோகநாதன் திருச்சி மாவட்ட 2 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் வழக்கு தொடர்ந்தார். பண மோசடி, மிரட்டல் உள்ளிட்டவற்றுக்கு முகாந்திரம் இருப்பதாக கருதிய அப்போதைய 2 ஆவது குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி முரளிதர கண்ணன் போலீஸôருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில் நத்தம் விஸ்வநாதன், அவர் நண்பர் காமராஜ் ஆகியோர் மீது ஒரு மாதத்துக்குள் வழக்கு பதிந்து, விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கே.கே நகர் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

போலீஸர் இந்த சம்பவம் குறித்து கடந்த 20.8.17 ல் விசாரித்ததாகவும், இது போலியான புகார் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்பட்ட நாளில் நத்தம் விஸ்வநாதன் திருநெல்வேலியில் நடந்த நிகழ்ச்சியில் இருந்ததற்கான ஆதாரத்தை லோகநாதன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து மீண்டும் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் நிலுவை வழக்குகளை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம், இந்த வழக்கை எம்பி, எம்எல்ஏ}க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ள, 2 ஆவது குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.

நீண்ட காலமாக முடங்கி கிடந்த நத்தம் விஸ்வநாதன் மீதான மோசடி வழக்கு மீண்டும் எம்பி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உயிர்ப்பித்திருக்கும் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.