Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஒரு கோடி 2 கோடியில் அல்ல ரு.120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டும் அமைச்சர் .

0

 

”கைத்தறித்துறை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ‘காந்தி’ என்கிற பெயர்க் காரணத்துக்காக மட்டுமே தலைவர் ஸ்டாலின், எனக்கு இந்தத் துறையைக் கொடுத்தார்” என்று நிகழ்ச்சியொன்றில் பேசி, தன் தகுதியைக் கேள்விக்குள்ளாக்கியிருந்தார் அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி.

இதைத் தொடர்ந்து, இலவச வேட்டி ஜரிகையில் கமிஷன் உள்ளிட்ட சர்ச்சைகள் கிளம்பின. இந்த நிலையில், ”ராணிப்பேட்டை நகரத்துக்கு மத்தியிலேயே ரூ.120 கோடி மதிப்பீட்டில், இரண்டு பிளாக்குகள் – மூன்று அடுக்குகள் கொண்ட பிரமாண்ட பங்களா கட்டிக்கொண்டிருக்கிறார் காந்தி” என்று அவர்மீது புதிய குற்றச்சாட்டு வீசப்பட்டிருக்கிறது.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சல்மான், ”சட்டமன்றத் தேர்தலின்போது, அமைச்சர் காந்தி தாக்கல் செய்த வேட்புமனுவில், ‘பரம்பரைச் சொத்துகள் எதுவுமே இல்லை. ரூ.48 கோடிக்குச் சுயமாகச் சம்பாதித்த சொத்துகள் மட்டுமே இருக்கின்றன’ என்று தெரியப்படுத்தியிருந்தார். அவர், இத்தனை கோடிக்கு எப்படி அதிபதி ஆக முடிந்தது என்பதே சந்தேகமாகத்தான் இருக்கிறது.

அமைச்சர் காந்தி
நான்காவது முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முதன்முறை கணக்கு காட்டிய சொத்துகளுக்கும், இப்போது காட்டுகிற சொத்துகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இவ்வளவு பணமும் வானத்திலிருந்தா கொட்டியது… பணம் வந்த வழியைச் சொல்லுங்கள். இப்போது, ரூ.120 கோடிக்கு வீடு கட்டப்படுவதாக சமூக வலைதளம் தொடங்கி, ராணிப்பேட்டை மக்களுமே பேச ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வளவு தொகை எங்கிருந்து வந்தது என அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும்தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, அமைச்சர் காந்தி கூறியது. ”முதலில், நான் பிஸினஸ்மேன், அப்புறம்தான் அரசியல்வாதி. 1963 முதலே தொழில் செய்து வருகிறேன். முதலில் டீலர்ஷிப் தொழில். 1965-ல் லெதர் தொழில்களுக்கான சல்ஃபியூரிக் ஆசிட் விநியோகிக்கும் ஏஜென்சி போன்ற தொழில்களைச் செய்தேன். 1967-ல் தி.மு.க-வில் சேர்ந்தேன். அதன் பிறகு, 1968-லிருந்து கான்ட்ராக்ட் வேலைகளில் ஈடுபட்டேன். அதன் மூலம் கிடைத்த வருமானத்தில், 1987-ல் சொந்தமாக லெதர் கம்பெனி தொடங்கியதோடு, ஆந்திராவிலும் பிசினஸை விரிவாக்கம் செய்யத் தொடங்கினேன்.

சென்னையில் இரண்டு கெஸ்ட் ஹவுஸ், ராணிப்பேட்டையில் ஒரு ஹோட்டல், இன்டர்நேஷனல் பள்ளிகளை நடத்துகிறேன். கடந்த 15 ஆண்டுகளாகத்தான் கல்குவாரி தொழிலிலும் ஈடுபட்டுவருகிறேன். இப்படித் தொழில்கள் மூலமாகத்தான் சம்பாதித்திருக்கிறேனே தவிர, தவறான வழியில் சொத்துகளைச் சேர்க்கவில்லை. என் மனைவி சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியை 28 ஆண்டுகளாக நடத்திக்கொண்டிருக்கிறார். இப்படி என் குடும்பத்தார் பெயர்களைத் தவிர, வேறு யாருடைய பெயரிலும் சொத்துகளை வாங்கிப் பதிவு செய்ததில்லை.

ராணிப்பேட்டையில் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பங்களாவில் என் பெரிய மகன் வசிக்கிறார். கெஸ்ட் ஹவுஸில் நானும், என் சின்ன மகனும் தங்கியிருக்கிறோம். இப்போது ரூ.120 கோடியில் பங்களா கட்டுவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். என் வீடு, அலுவலகம், வேலையாட்களின் குடியிருப்பு எல்லாம் சேர்த்துதான், இருபத்து ஆறாயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டுமானப் பணி நடக்கிறது. ஒரு சதுரடிக்கு 2,000 ரூபாய் என்றால், மொத்தம் எவ்வளவு வரும் என்று நீங்களே கணக்கு பார்த்துக்கொள்ளுங்கள்.

20 ஆண்டுகளுக்கு முன்பே நான் வாங்கிய இடத்தில் கட்டப்படும் அந்த வீட்டின் மொத்த திட்ட மதிப்பே பத்து கோடி ரூபாய்தான். செலவு கூடினாலும் பன்னிரண்டு கோடியைத் தாண்டாது. அதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.6 கோடி கடன் வாங்கியிருக்கிறேன். என்மீது களங்கம் சுமத்தவே ரூ.120 கோடி என அவதூறு பரப்புகிறார்கள். இப்படித்தான் என் துறையில் தவறு நடப்பதுபோலக் காட்டுவதற்காக, ஜரிகையில் கமிஷன் அடித்ததாகவும் பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தினார்கள். இலவச வேட்டிக்கான துணியை மொத்தமாகக் கொள்முதல் செய்ய ஒதுக்கியதே ரூ.200 கோடிதான். அதில், சில்வர் ஜரிகை பார்டர் போடுவதற்கான திட்டத்தையே தீட்டவில்லை. ஆனால், ‘ஜரிகையில் மட்டுமே ரூ.200 கோடி கமிஷன்’ என பொய் குற்றம்சாட்டுகிறார்கள்.

1968-லிருந்து என் பெயரில் கார் இருக்கிறது. 1973 முதல் புதிய கார்களை வாங்கிப் பயன்படுத்திவருகிறேன். இப்போதும் என் வீட்டில் பி.எம்.டபிள்யூ உள்ளிட்ட பத்து கார்கள் இருக்கின்றன. நான் அமைச்சராகும் முன்பே 1.2 கோடி ரூபாய்க்கு பென்ஸ் கார் வாங்கிவிட்டேன். ஆனால், அந்த கார் ஆறரை கோடி ரூபாய் என்றும் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் சரியான ஆவணங்களை வைத்திருக்கிறேன். முறையாக வருமானம் காட்டுகிறேன். வரி செலுத்துகிறேன். அல்பைகள்போல குறுக்குவழியில் சம்பாதிக்கவில்லை. என்மீது அவதூறு பரப்புகிறவர்கள்மீது சைபர் க்ரைமில் புகார் செய்வது, வழக்கு தொடர்வது குறித்து ஆலோசித்துவருகிறேன்” என்றார் காட்டமாக.

Leave A Reply

Your email address will not be published.