Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தொடர் விடுமுறை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

0

 

தொடர் விடுமுறையாக 21, 22 தேதிகள் வார விடுமுறை, 23-ந்தேதி ஆயுதபூஜை, 24-ந்தேதி விஜயதசமி வருகிறது. இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முதல் 22-ந் தேதி வரை சொந்த ஊருக்கு செல்லவும், பின்னர் விடுமுறை முடிந்து 24, 25-ந் தேதிகளில் திரும்பி வரவும் பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.

‘அதன்படி திருச்சி, புதுக்கோட்டை உள்பட 12 ஊர்களில் இருந்து சென்னைக்கு (இருவழித்தடங்களில்) 300 சிறப்பு பஸ்களும், திருச்சியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு இருவழித்தடங்களில் 200 பஸ்களும் என்று 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. விடுமுறை முடிந்து பயணிகள் திரும்பிச்செல்ல 24, 25-ந் தேதி ஆகிய 2 நாட்களில் திருச்சியில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 2 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

குறிப்பாக கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முன்பதிவு செய்வதன் மூலம் பயணிகளுக்கு வசதியாகவும், தேவையான பஸ் சேவையை அளிக்கவும் ஏதுவாக இருக்கும். எனவே பயணிகள் www.tnstc.in இணையதளம் மூலமும் செல்போன் செயலி மூலமும் முன்பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இந்த தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் தமிழகத்தின் மையப்பகுதியாக இருப்பதால் திருச்சி மத்திய பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அரசு விடுமுறை நாட்கள், விழாக்காலங்கள் உள்ளிட்ட நாட்களில் மத்திய பஸ்நிலையத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு பயணிகள் கூட்டம் அலைமோதும். இந்தநிலையில் இன்று, நாளை வார விடுமுறை மேலும், ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை விடுமுறை வருகிறது. இதனால் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. மேலும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாபடும். விழாவுக்காக சொந்த ஊர் செல்ல திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் பகுதி பொதுமக்கள் நேற்று மாலையே திருச்சி மத்திய பஸ்நிலையத்துக்கு புறப்பட்டு வந்தனர். இதனால் அதிகாலை வரை பஸ்நிலையம் பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதுதவிர, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நேற்று நள்ளிரவு திருச்சிக்கு வந்தனர். இதனால் அதிகாலை வரை அவர்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர். ஒரே நேரத்தில் ஏராளமான பயணிகள் குவிந்ததால் பஸ்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தது. இதுபோல் நேற்று மாலை முதல் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

Leave A Reply

Your email address will not be published.