Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வங்கி கடனுக்காக சொத்தை ஜப்தி செய்ய சென்ற அதிகாரிகளை தாக்கிய திமுகவிரை கைது செய்யாத விடியா அரசுக்கு எடப்பாடி கண்டனம்.

0

 

வாங்கிய வங்கி கடனுக்காக சொத்தை ஜப்தி செய்யச் சென்ற அதிகாரிகளை தாக்கிய திமுக குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கை கட்டி வேடிக்கை பார்க்கும்‌ காவல்‌ துறைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திமுக ஆட்சி அதிகாரத்தில்‌ இல்லாத பொழுதே ஒசி பரோட்டா கேட்டு தாக்குதல்‌; செல்போன்‌ கடை தாக்குதல்‌; மசாஜ்‌ நிலைய பெண்கள்‌ மீது தாக்குதல்‌ என்று திமுக நிர்வாகிகளின்‌ அராஜக செயல்பாடுகள்‌ 2021, தமிழக சட்டமன்றப்‌ பொதுத்‌ தேர்தலுக்கு முன்பே மிகவும்‌ தலைவிரித்தாடியது. திமுக நிர்வாகிகளின்‌ மக்கள்‌ விரோத செயல்களுக்காக, திமுக தலைவர்‌ திரு. ஸ்டாலின்‌ அப்போது மன்னிப்பு கேட்டதை அனைத்து ஊடகங்களும்‌ வெளியிட்டன.

ஆட்சிப்‌ பொறுப்பேற்ற பிறகு, திமுக நிர்வாகிகள்‌ சட்டத்தை தங்கள்‌ கைகளில்‌ எடுத்துக்கொண்டு நடத்திய சம்பவங்களை, நடந்து முடிந்த மூன்று சட்டமன்றக்‌ கூட்டத்‌ தொடர்களிலும்‌ நான்‌ விளக்கமாகப்‌ பேசியுள்ளேன்‌. ஆனால்‌, அதிகாரிகளுக்கு எதிரான திமுக நிர்வாகிகளின்‌ தாக்குதல்‌ தொடர்ந்து நடைபெற்றுக்‌ கொண்டே தான்‌ இருக்கிறது.

ஒரிரு நாட்களுக்கு முன்பு, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில்‌ பக்கிரிசாமி, கார்த்திகேயன்‌, ரெங்கநாதன்‌ உள்ளிட்ட 4 பேர்‌, கனரா வங்கியில்‌ 22 கோடி ரூபாய்‌ கடன்‌ வாங்கியதாகவும்‌, அவர்கள்‌ கடனை திரும்ப கட்டாததால்‌, மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ உத்தரவின்படி, வங்கியில்‌ பெற்ற கடனுக்காக, காஜாமலை பகுதியில்‌
உள்ள சொத்தை திருச்சி மண்டல துணை தாசில்தார்‌ திரு. பிரேம்குமார்‌ மற்றும்‌ கனரா வங்கி ஊழியர்கள்‌ ஜப்தி செய்யச்‌ சென்றபோது, அடையாளம்‌ தெரியாத 20-க்கும்‌ மேற்பட்ட திமுக குண்டர்கள்‌ உருட்டுக்‌ கட்டைகளால்‌ துணை தாசில்தாரையும்‌, வங்கி ஊழியர்களையும்‌ சரமாரியாகத்‌ தாக்கியதாகவும்‌, இந்தத்‌ தாக்குதலில்‌ படுகாயம்‌
அடைந்த துணை தாசில்தார்‌ மற்றும்‌ வங்கி ஊழியர்கள்‌, திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்‌ நாளிதழ்களிலும்‌, ஊடகங்களிலும்‌ செய்திகள்‌ வெளிவந்துள்ளன.

இதுபற்றி தகவல்‌ அறிந்த வருவாய்த்‌ துறை அதிகாரிகள்‌ மற்றும்‌ அலுவலர் சங்கத்தினர்‌, ஜப்தி செய்யச்‌ சென்ற அதிகாரிகள்‌ மீது தாக்குதல்‌ நடத்தியவர்களை காவல்‌ துறையினர்‌ இதுவரை கைது செய்யவில்லை என்று தெரிய வருகிறது.

இந்நிலையில்‌, தாக்குதல்‌ நடத்தியவர்கள்‌ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என, திருச்சி மாவட்ட வருவாய்த்‌ துறை சங்கத்தின்‌ சார்பில்‌ 750-க்கும்‌ மேற்பட்டோர்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ பணிகளைப்‌ புறக்கணித்து தர்ணா போராட்டத்தில்‌ ஈடுபட்டதாகச்‌ செய்திகள்‌ தெரிய வருகின்றன.

மேலும்‌, உடனடியாக தாக்குதல்‌ நடத்தியவர்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்‌, அடுத்த கட்டமாக தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள வருவாய்த்‌ துறை அலுவலர்‌ சங்கங்கள்‌ அனைத்தையும்‌ ஒருங்கிணைத்து மிகப்‌ பெரிய போராட்டம்‌ நடத்தப்படும்‌ எனவும்‌ அச்சங்கத்தினர்‌ தெரிவித்ததாக நாளிதழ்‌ மற்றும்‌ ஊடகச்‌ செய்திகள்‌ கூறுகின்றன.

திருச்சி அரசு மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்றுவரும்‌ துணை தாசில்தாரை, நேரில்‌ பார்க்கச்‌ சென்ற மாவட்ட ஆட்சியர்‌, தாக்குதல்‌ நடத்தியவர்கள்‌ மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று கூறியும்‌, போலீசார்‌ எந்தவித நடவடிக்கையும்‌ எடுக்காத காரணத்தால்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌ முன்பு வருவாய்த்‌ துறை ஊழியர்கள்‌ தொடர்‌ போராட்டத்தில்‌ ஈடுபட்டு வருவதாக ஊடகச்‌ செய்திகள்‌ தெரிவிக்கின்றன

வருவாய்த்‌ துறை அதிகாரிகள்‌ மீது தாக்குதல்‌ நடத்தியவர்களை உடனடியாகக்‌ கைது செய்து, அவர்கள்‌ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.