Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியா- பாகிஸ்தான் இன்று மோதல்.உலக கோப்பை தொடர் துரதிஷ்டம் இன்று விலகும்? வாசிம் அக்ரம் நம்பிக்கை.

0

நடப்பு உலகக் கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் ஊதித்தள்ளிய உற்சாகத்தோடு ஆமதாபாத்துக்கு வந்திருக்கிறது. முதல் இரு ஆட்டங்களில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோரின் பேட்டிங் அபாரமாக இருந்தது. பந்துவீச்சில் பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் கலக்கினர். இப்போது ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு குறிவைத்து இருக்கிறார்கள். ஆனால் முந்தைய இரு ஆட்டம் போன்று இது எளிதாக இருக்காது.

டெங்கு காய்ச்சலால் முதல் இரு ஆட்டங்களை தவற விட்ட தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் குணமாகி விட்டார். அவர் 99 சதவீதம் போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இதன் மூலம் கில் இறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவரது வருகை இந்தியாவின் பேட்டிங்கை மேலும் பலப்படுத்தும்.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. இதில் இலங்கைக்கு எதிராக 345 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி அப்துல்லா ஷபிக், முகமது ரிஸ்வான் சதத்தோடு 10 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. உலகக் கோப்பையில் துரத்திப்பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கு இது தான். இந்த வெற்றியால் பாகிஸ்தான் வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் களம் காணுவார்கள்.

அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் கடந்த 5 ஆட்டங்களில் ஒன்றில் கூட 30-ஐ தாண்டவில்லை. முக்கியமான இந்த ஆட்டத்தில் ரன்மழை பொழியும் வேட்கையில் உள்ளார். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, ஷதப் கான் வலு சேர்க்கிறார்கள்.

இந்நிலையில் உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் 7 முறை மோதி உள்ளன. இதில் அனைத்து ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறும்போது,’1996-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் நாங்கள் இந்தியாவிடம் தோல்வி அடைந்தோம். அப்போது அது நரகமாக இருந்தது. அந்த தோல்வியை யாரும் ஜீரணிக்கவில்லை, நாங்கள் பலத்த பாதுகாப்புடன் வீடு திரும்ப வேண்டியிருந்தது, பல நாட்கள் எங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியவில்லை.

தொடர் தோல்வி என்னும் சங்கிலி இம்முறை உடைக்கப்படும். பாகிஸ்தான் அணி அதைச் செய்யும் திறமை கொண்டது. ஏனெனில் டி 20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்குப் பின்னர் 2021-ம் ஆண்டு துபாயில் பாகிஸ்தான் அதை செய்து காட்டியது.

50 ஓவர் உலகக் கோப்பையில் தொடர் தோல்வி துரதிருஷ்டம் இன்று விலகும்’ என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.