Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மழை காலம் முடியும் வரை தோண்டிய ரோடுகளை மீண்டும் தோண்ட கூடாது என உத்தரவு. அமைச்சர் கே.என்.நேரு

0

 

திருச்சி மாநகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரோபோட்டிக்ஸ் வாகனம் மற்றும் துணிப்பை திருவிழாவை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “டெங்கு வராமல் தடுப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், யாருக்கும் ஏதேனும் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அதற்கேற்றார் போல் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிய நிலையில், சென்னை மாநகராட்சியை பொறுத்த அளவில் 30ஆம் தேதிக்குள் வெள்ள தடுப்பு மழை நீர் வடிகால் பணிகள் முடிக்க திட்டப்படப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 50 நாட்களாக மாலை நேரங்களில் அதிக மழை பெய்வதால் அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் அடுத்து ஒரு வாரத்திற்குள் அந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்படும்.

அதேபோன்று, பிற மாவட்டங்களிலும் மழை வடிகால் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்கேயும் அதிக அளவில் தண்ணீர் தேங்காமல் இருக்க, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அதற்கான நிதி அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

முன்பெல்லாம் முழங்கால் அளவிற்கு தண்ணீர் நின்றால் கூட எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் தற்பொழுது கணக்கால் அளவு தண்ணீர் நின்றால் கூட தண்ணீர் நிற்கிறது என்கிறார்கள். அதுவும், அடுத்த அரை மணி நேரத்தில் வடித்து விடுகிறது. சென்னையில் மெட்ரோ ரயில் பணி, மின்சார தொழில்நுட்ப பணி, மெட்ரோ குடிநீர் பணி என மூன்றும் நடைபெறுவதால் ஆங்காங்கே பள்ளம் ஏற்படுகிறது.

மழைக்காலம் முடியும் வரை எங்கேயும் சாலைகளை தோண்டக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியைப் பொறுத்த அளவில், பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு செய்யும் பணி இன்னும் 20 சதவீதப் பணிகள் மட்டுமே உள்ளது.

கடந்த ஏழு வருடமாக எதுவுமே செய்யவில்லை. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வருடத்தில் சாலை, மின்விளக்கு, குடிநீர் இணைப்புகள் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம். அதைப் பற்றி எல்லாம் பேச மாட்டுகிறீர்களே”? என்று கூறினார்.

மேலும், “குடமுருட்டி பகுதியில் இருந்து பஞ்சப்பூர் வரை கோரையாறு கரையை பலப்படுத்துவதற்கு 330 கோடி ரூபாய்க்கு திட்டம் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் நீர்வளத் துறை சார்பில் அனைத்து ஆறுகளிலும் தூர்வரப்பட்டுள்ளது. அதனால் எங்கேயும் கரைகளில் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.