Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நவம்பர் 2ஆம் தேதி முதல் திருச்சி வியட்நாம் விமான போக்குவரத்து துவக்கம்.வியட்ஜெட் நிறுவன வர்த்தகத் துணைத் தலைவர் திருச்சியில் பேட்டி.

0

 

திருச்சி – வியட்நாம் இடையே நேரடி விமான சேவைகள் வருகிற நவம்பர் 2ஆம் தேதி முதல் வியட்ஜெட் விமான நிறுவனம் தொடங்கவுள்ளதாக, அந்நிறுவனத்தின் வர்த்தக துணைத் தலைவர் லிங்கேஸ்வரா தெரிவித்துள்ளார்.

வியட்ஜெட் நிறுவனத்தின் வர்த்தக துணைத் தலைவர் லிங்கேஸ்வரா இன்று திருச்சி சங்கம் ஹோட்டலில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:-

வியட்நாம் நாட்டின் முன்னணி விமான நிறுவனமாக திகழும் வியட்ஜெட் விமான நிறுவனம், இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் வருகிற நவம்பர் 2ஆம் தேதி முதல் திருச்சியில் இருந்து வியட்நாம் நாட்டின்
ஹோ சி மின் சிட்டி (Ho Chi Minh City) இடையே வாரத்திற்கு 3 விமானங்களையும், ஹோ சி மின் சிட்டியில் இருந்து திருச்சி இடையே வாரத்திற்கு 3 விமானங்களையும் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்கள் வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் திருச்சியில் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு,
ஹோ சி மின் சிட்டிக்கு உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு சென்றடைகிறது. அதேபோல் அங்கிருந்து ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு வந்தடைகிறது.

தமிழ்நாட்டிலிருந்து வியட்நாமுக்கு நேரடிப் போக்குவரத்து என்பது திருச்சி விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும், இரு நாடுகளின் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய விடயமாக அமையும். இது வியட்நாம் மற்றும் இந்தியா இடையே சுற்றுலா, பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொச்சியில் இருந்து ஹோ சி மின் நகரத்திற்குச் செல்லும் விமான சேவையுடன், இந்த புதிய சேவையை நாங்கள் தொடங்குவதன் மூலம், இந்தியாவின் தென்பகுதியை வியட்நாம் நகரங்களுடன் இணைப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவையை வழங்குவதன் மூலம், இரு நாட்டு மக்களிடையிலான பயணம் மற்றும் வர்த்தகம் நல்ல வளர்ச்சி அடையும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.

வியட்நாம் தேசிய சுற்றுலா ஆணையத்தின் அறிக்கையின்படி, நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் வியட்நாமிற்குச் சென்ற இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை, தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தைவிட 200 விழுக்காடு அதிகரித்து இருப்பதாகவும், வியட்நாமிற்கு சுற்றுலா செல்லும் நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இந்தியாவும் இடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

வியட்நாமின் முக்கிய பொருளாதார, கலாச்சார மற்றும் சுற்றுலா மையமாக திகழும் ஹோ சி மின் நகரம், ஆசிய கலாச்சாரத்தின் தனித்துவமான பண்புகள் மற்றும் நவீன பெருநகரத்தின் பரபரப்பான வாழ்க்கை முறைகள் மற்றும் வியட்நாமில் உள்ள மற்ற நகரங்களை இணைக்கும் முக்கியப் பகுதியில் அமைந்துள்ளது. “தூர கிழக்கின் முத்து” என்று உலக சுற்றுலாப் பயணிகளால் அறியப்படும் இங்கு, புதுமணத் தம்பதிகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஏற்ற ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

ஆசியாவில் உள்ள சிறந்த சுற்றுலா நகரங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. மேலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அங்கிருந்து வியட்நாமின் புகழ் பெற்ற கடற்கரை பகுதிகளான டா நாங், நா ட்ராங் மற்றும் பிற நகரங்களுக்கும் வியட்ஜெட் விமானம் குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில், இந்தியாவில் இருந்து வியட்நாம் செல்லும் விமானங்களுக்கு பிசினஸ் மற்றும் ஸ்கைபோஸ் இருக்கைகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி 2023 வரை சிறப்பு சலுகைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.

அக்டோபர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரையிலான காலத்தில் கூடுதல் சலுகையாக ஒரு வழி கட்டணமாக புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் 5 ஆயிரத்து 555 ரூபாய் நிர்ணயித்துள்ளது. மேலும், விபரங்களுக்கு இதன் இணையதளம் www.vieticair.com அல்லது அதன் மொபைல் செயலியில் கண்டறியலாம்.

நவம்பர் 2ஆம் தேதி முதல், வியட்ஜெட், டெல்லி, மும்பை, அகமதாபாத், கொச்சி மற்றும் திருச்சி ஆகிய ஐந்து நகரங்களை இணைக்கும் 35 வாராந்திர இருவழி விமான சேவைகளை வியட்நாமின் ஹனோய் மற்றும் ஹோ சி மின் நகரங்களுக்கு இயக்க உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.