Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.16.61 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது.

0

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்த பரமசிவம் மனைவி ராணி என்பவரின் செல்போன் எண்ணுக்கு திருச்சி ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.அதை பார்த்த ராணி தனது மகனின் வேலைக்காக அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, அதில் ஏர்போர்ட்டில் வேலை பெற ஆசை வார்த்தைகள் கூறி ரூபாய் 16,61,038/- பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர்.

பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த ராணி இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட ராணி அளித்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

ராணியிடம் பணம் மோசடி செய்தவர் டெல்லி, ஜமீயாநகர் பகுதியை சேர்ந்த மொஹத் அபுஷார்கான் (வயது 22) என்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் டெல்லி சென்று மொஹத் அபுஷார்கானை கடந்த 17.09.2023 அன்று புதுடில்லி ஷாஹீன்பாக் காவல் நிலையம் முன்பு கைது செய்து, டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி Transit Warrant பெற்று பின்னர் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் – IV ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் மொஹத் அபுஷார்கான், பொதுமக்களிடம் மோசடியாக பணத்தை பெற்று, வங்கி கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்து கமிஷன் தொகை பெற்றுள்ளார் என்பதும், அதே போன்று இவரது அண்ணன் வங்கி கணக்குகளிலும் மோசடி செய்த பணத்தை பெற்று பணப்பரிமாற்றம் செய்து கமிஷன் தொகை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மோசடியில் பலநபர்கள் ஈடுபட்டிருப்பதால், அவர்களையும் கைது செய்யும் பொருட்டு சைபர் குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.