Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக ஆட்சியில் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இதயத்தில் உள்ள அடைப்புகள் கண்டுபிடிக்கப்படும். மாவட்ட செயலாளர் குமார் பரபரப்பு பேச்சு.

0

 

செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திருச்சியில் அதிமுக ஒருங்கிணைந்தமாவட்டம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் , சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடைபெற்றது.

நிகழ்வில் பங்கேற்ற திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர்
ப. குமார் பேசியது :

செந்தில்பாலாஜி கைதான சம்பவம் குறித்து, திமுகவினர் பலரும் பல்வேறு தவறான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அவர் அதிமுக ஆட்சியின் போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல முறைகேடுகளை செய்துள்ளதாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், செந்தில்பாலாஜியின் உதவியாளர் பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டு, பணத்தை திருப்பி கொடுத்துவிட்டதாகவும் எனவே தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என முறையிட்டார். செந்தில்பாலாஜியும் தனக்கு இதில் தொடர்பில்லை எனக்கூறி விடுவிக்க கூறினார். நீதிமன்றமும் அவர்களை விடுவித்தது. ஆனால், இதை உற்று நோக்கிய உச்சநீதிமன்றம்தான் சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் அமலாக்கத்துறைக்கும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. எனவே அமலாக்கத்துறையே முன்வந்து, செந்தில்பாலாஜி மற்றும் உறவினர்கள் வீடுகளில் சோதனை மற்றும் விசாரணை நடத்தி தேவையான ஆவணங்கள் கிடைத்த நிலையில் அவரைக் கைது செய்துள்ளது.
இந்த விவரம் தெரியாமல் திமுகவினர் பல தகவல்களை கூறிவருகின்றனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்துக்கு உரிமையாளர் என்பது போலவும், திமுக அமைச்சர்கள் அனைவருமே, அவர்கள் வகிக்கும் துறைகளுக்கு அமைச்சர்கள் என்பதை மறந்து அவர்களே உரிமையாளர் என்ற வகையில் செயல்பட்டு வருகின்றனர். செந்தில்பாலாஜி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் உரிமையாளர்போல செயல்பட்டு அனைத்து கடைகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தையும், மேலும், மது உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து முறைகேடாக மதுவிற்பனை செய்யப்படுவதில் கிடைக்கும் வருவாயையும் ஈட்டுவதுடன், முதல்வர் குடும்பத்துக்கும் வழங்கி வருகிறார். எனவேதான் இந்த விவரம் அமலாக்கத்துறைக்கு தெரியக்கூடாது எனக்கூறி, முதல்வர்,
மட்டுமின்றி அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரிசன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் அவரை மருத்துவமனையில் சென்று செந்தில்பாஜியை பார்த்து வருகின்றனர்.
அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில்தான் என்பதை உணரவேண்டும்.

 

அமலாக்கத்துறை ஒன்றும் கே.என். நேருவுக்கோ, அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கோ சலாம் போடுகிற திருச்சி மாநகர போலீஸ் மாதிரி அல்ல.

அமலாக்கத் துறையினர் நேர்மையானவர்கள்,அவர்கள் செந்தில் பாலாஜி ஊழலில் ஈடுபட்டது தெரிந்து தான் கைது செய்து உள்ளனர்.

இன்று செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறுகிறார்கள்.
விசாரித்தால் தான் அறுவை சிகிச்சை நடந்தது தெரியவரும். காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை வைப்பதை விட அருகில் உள்ள கனிமொழி வீட்டிலேயே வைத்திருக்கலாம் ஏனென்றால் அந்த காவிரி மருத்துவமனை மற்றும் அந்த கட்டிடம் கனிமொழிக்கு சொந்தமானது.

அதிமுக ஆட்சியில் நேரு தனது பெயருக்கு ஏற்ப நேர்மையாக நேராக நடப்பார்,ஆனால் திமுக ஆட்சியில் அவர் கோணலாகி விடுவார்.
திருச்சியில் கே.என். நேருவின் அராஜகமும் அவருடைய
அடிபொடிகளுடைய அராஜகமும் அதிகமாய் கொண்டு வருகிறது.
செசன்ஸ் கோர்ட் காவல் நிலையம் புகுந்து தாக்கியவர்கள் மீது அரசு சொத்தை சேதமாகிய வழக்கு பதியப்படவில்லை.

நேருவுக்கு சொந்தமான கேர் கல்லூரி நம்முடைய ஆட்சிக் காலத்தில் ஏலம் விடப்படக்கூடிய சூழலில் இருந்து.
ஆனால் இன்று அந்தக் கல்லூரிக்கு இருந்த கடன்கள் அனைத்தையும் அடைத்துவிட்டார்.

மேலும் இந்த இரண்டு ஆண்டு காலத்தில் பல்லாயிரம் கோடி சொத்தையும்
கே.என்.நேரு சம்பாதித்து உள்ளார்.

கே.என்.நேருவின் ஒரு நாள் வருமானம்
ரூ.7 கோடி என கூறுகின்றனர்.

இதேபோன்று அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் தற்போது நிறைய ஊழல்களை செய்து வருகிறார்.தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 750 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வளாகங்களில் பல கோடி ரூபாய் ஊழல் என கூறப்படுகிறது.

இவர்கள் மீது தற்போது உள்ள தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு போடாது.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வந்த பின் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு போடும் அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கி
கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி இதயத்தில் எத்தனை அடைப்புகள் இருக்கின்றது என்பதை கண்டுபிடித்து விடும்.

இவர்கள் மட்டுமல்ல திமுகவில் உப்பு தின்றவர்கள் எல்லாம் தண்ணீர் குடிக்கின்ற காலம் வெகு விரைவில் வரும்.

அதேபோல அதிமுக அலுவலகத்தை உடைத்து சூறையாடிய ஓபிஎஸ் தரப்பினர், தாங்கள் எடுத்துச்சென்ற பொருட்களை மீண்டும் ஒப்படைத்துவிட்டதால் அவர்கள் மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆக திமுக ஆட்சியில் தவறிழைத்தவர்கள் தவறை உணர்ந்து பொருட்களை திருப்பிக்கொடுத்துவிட்டால் அவர்கள் புனிதராகிவிடும் நிலை உள்ளது. திருச்சியிலும் இதே நிலைதான் நிலவி வருகிறது.

எனவே நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.

தொடர்ந்து, ஊழல் முறைகேடுகள், விலைவாசி உயர்வு,சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை திமுக அரசு கட்டுப்படுத்த வேண்டும், லஞ்ச வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கம் எழுப்பி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான மோகன் தலைமை வகித்தார்.

திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, அமைப்பு செயலாளர் ரத்தினவேல், எம்.ஜி. ஆர். இளைஞர் அணி மாநில செயலாளர் சிவபதி, எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர்கள் ஜெ. சீனிவாசன்.
பொன் செல்வராஜ்,
மாவட்ட இணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, ஆவின் சேர்மன் மற்றும் அதிமுக மாணவரணி செயலாளர் கார்த்திகேயன்,
கவுன்சிலர்கள் அம்பிகாபதி, அரவிந்தன்,முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர்,டிபன் கடை கார்த்திகேயன்,
எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிந்தை முத்துக்குமார்,
தொழிலதிபர் இப்ராஹிம்சா மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.