திருச்சி ரயில்வே பயிற்சி மையத்தில் மேலும் மாணவர்கள் அம்மை நோயால் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்க எஸ் ஆர் எம் யூ வீரசேகரன் கோரிக்கை.
திருச்சி ரெயில்வே பயிற்சி நிறுவனத்தில்
14 மாணவர்கள் அம்மை நோயால் பாதிப்பு.
மேலும் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வீரசேகரன் கோரிக்கை.
திருச்சி ரெயில்வே மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் 420 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அதில் மொத்தம் 14 பேருக்கு அம்மை நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்பது பேரை ரெயில்வே நிர்வாகம் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மீதமுள்ளவர்கள் இங்கு தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி கோட்ட செயலாளரும், எஸ்.ஆர்.எம்.யூ.சங்க துணை பொதுச்செயலாளருமான வீரசேகரன் இன்று மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கான உணவு மற்றும் இணையதள மூலம் வழங்கக்கூடிய பயிற்சி வகுப்புகள், மருந்துகள் உள்ளிட்டவைகள் சரியாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
ரெயில்வே நிர்வாகம் அம்மை நோய் பாதித்தவர்களை இங்கு வைத்து அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்காமல் வீட்டிற்கு அனுப்பியுள்ளது கண்டிக்கத்தக்கது. ஆனால் மாநகராட்சி மேயர் அன்பழகன் இந்த தகவல் அறிந்து பயிற்சி மையத்தில் ஆய்வு நடத்தி இங்கு இருக்கக்கூடிய மாணவர்களை பரிசோதனை செய்து அம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடிய மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.
தொடர்ந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவர்களால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.
இருப்பினும் இங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் மற்றும் மற்ற பயிற்சி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் ரெயில்வே நிர்வாகம் செயல்பட வேண்டும்.
இவ்வாறு வீரசேகரன் கூறினார்.