தமிழகத்திலேயே முதல்முறையாக 12 வயது சிறுவனுக்கு மாற்று ரத்த வகையைச் சோந்த சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து திருச்சி தென்னுாா் காவேரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
இது குறித்து மருத்துவமனையின் சிறுநீரக சிகிச்சை துறை தலைமை மருத்துவா் டி. ராஜராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடலுாா் மாவட்டத்தை சோந்த 12 வயதான சிறுவனுக்கு மரபணு கோளாறு காரணமாக சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
சிறுவனின் தந்தை, சிறுநீரகத்தை தானமாக அளிக்க முன் வந்தாா். இருவரது ரத்தப் பிரிவுகளும் வெவ்வேறாக இருந்ததால், கடந்த ஜனவரி மாதம் ஏபிஓ இணக்கமற்ற சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சிகிச்சையில், தானமாக வழங்கப்பட்ட சிறுநீரகம் நிராகரிக்கப்படுவதைத் தடுக்க பிளாஸ்மா பரிமாற்றங்கள் உள்ளிட்ட சிறப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. அறுவைச் சிகிச்சைக்கு பிறகும் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு, உரிய மருந்துகள் அளிக்கப்பட்டதின் விளைவாக, தற்போது தானமாக சிறுநீரகம் பெற்ற சிறுவனும், தானம் வழங்கிய அவரின் தந்தையும் பூரண நலத்துடன் உள்ளனா்.
சிறுவனுக்கு ஏபிஓ இணக்கமற்ற சிறுநீரக உறுப்புமாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி தென்னூா் காவேரி மருத்துவமனையில்தான் என்றாா்.
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, காவேரி மருத்துவமனை செயல் இயக்குநா் மருத்துவா் டி. செங்குட்டுவன், தலைமை சிறுநீரக அறுவைச் சிகிச்சை மருத்துவா் செந்தில்குமாா், மருத்துவா்கள் பாலாஜி, செந்தில்வேல்முருகன், மருத்துவமனை வசதிகள் பிரிவு இயக்குநா் அன்புசெழியன் உடன் இருந்தனர்.