திருச்சியில் நகை பட்டறையில் திருடு போன நகைகள் 4 மணி நேரத்தில் மீட்பு – 2 பேர் கைது.
திருச்சி சந்துகடை அருகே சௌந்தர பாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு நகை பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சி இ.பி. ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக கட்டியுள்ள தனது வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை வந்து வீட்டை பார்த்த பொது வீடு , பீரோல் ஆகியவை உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 950 கிராம் தங்கம், கால்கிலோ வெள்ளி 1 லட்சத்து 50 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து ஜோசப் கோட்டை போலீசில் புகார் அளித்தார்.
நகைப்பட்டறையில் திருடுபோன சம்பவம் குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் எம். சத்தியப்ரியா உத்தரவின் பேரில், காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுலக்சனா தலைமையில் தனிப்படை அமைத்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், திருச்சி, கோட்டை, கீழரண்சாலை (இபிரோடு) கருவாட்டுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மா.பரணிக்குமார் (வயது 22), பாலக்கரை செங்குளம் காலனி, முருகன்கோயில் தெருவைச் சேர்ந்த க. சரவணன் ஆகிய இருவரும் நகை மற்றும் ரொக்கத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து, திருட்டுப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கைதான இருவரும் ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பரணிகுமார் ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் கைதாகி வெளியே வந்தவர்.
சம்பவம் நடந்து வழக்கு பதிவு செய்யப்பட்ட 4 மணி நேரத்தில் துப்பறிந்து திருடர்களை கைது செய்து நகைகளை மீட்டுள்ள தனிப்படையினரை காவல் ஆணையர் பாராட்டினார்.