Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணப்பாறை: ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.

0

 

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த
மேலும் ஒரு திருச்சி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்து, கடனாளியாகி கடைசியில் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்கின்றன.

ஏற்கனவே தமிழ்நாட்டில் 41 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்தனர். 42 -வது நபராக கடந்த 24 ம் தேதி மத்திய அரசுக்கு சொந்தமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்த ரவிசங்கர் (வயது 40) என்பவர் அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்தார்.

இந்த நிலையில் தற்போது 43 வது நபராக திருச்சி மணப்பாறை பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரை மாய்த்தார்.
அது பற்றிய விபரம் வருமாறு;-

திருச்சி மணப்பாறை அஞ்சல் காரன்பட்டி சவேரியார் புறம் பகுதியை சேர்ந்தவர் மரிய பொன்னுசாமி.
இவரது மகன் வில்சன் (வயது 26). கூலித் தொழிலாளி.
இவர் சிறு வயதிலேயே திருமணம் செய்துள்ளார். தற்போது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டது. கூலி வேலை செய்து சம்பாதிக்கும் சொற்ப வருமானத்தையும் ஆன்லைன் ரம்மியில் இழந்து வந்தார். ஒரு கட்டத்தில் கையிருப்பு கரையவும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே குடும்பச் செலவுகளுக்கும் பணம் கொடுப்பதை சுருக்கிக்கொண்டார். இதனால் குடும்பத்திலும் பிரச்சினைகள் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால வாழ்க்கையில் விரக்தி அடைந்த வில்சன் நேற்று இரவு தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். அதைத்தொடர்ந்து குடும்பத்தினர் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் இன்று அதிகாலை வில்சன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் திருச்சியில் தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே ஆன்லைன் ரம்மி தடை செய்ய தமிழக அரசு போராடி வருகிறது.
தமிழக சட்டசபையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது பின்னர் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது ஆனால் அந்த தடை மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பி விட்டார்.
அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அந்த மசோதா சட்டமன்றத்தில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.