Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் முதன்மையாக இடம் பெறாவிட்டால் கருப்பு மை கொண்டு அழிப்போம். திருச்சியில் பாமக தலைவர் ராமதாஸ்.

0

 

வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில்
தமிழ்மொழி முதன்மையாக இடம்பெற வேண்டும்

இல்லையேல் கருப்பு மையுடன் வருவோம் பாமக தலைவர் ராமதாஸ் பேச்சு.

தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் முதன்மையாக இடம் பெறவில்லையென்றால், ஒரு திங்கள் இடைவெளிவிட்டு கருப்பு மை வாளி மற்றும் ஏணியுடன் வலம் வருவோம். எங்களை அந்த சூழ்நிலைக்கு தள்ளிவிடாதீர்கள் என்றார் பா ம க மற்றும் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ச. ராமதாஸ்.
பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில், தமிழைத் தேடி என்ற தலைப்பிலான விழிப்புணர்வு பரப்புரைப் பயணத்தின் 7ஆம் நாள் பொதுக்கூட்டம் திருச்சியில் மத்திய பேருந்து நிலையப் பகுதியில் நேற்று இரவு நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அவர் மேலும் பேசியது :
தமிழ் இன்று எங்கும் இல்லை, எதிலும் இல்லை. தமிழ் எங்கு இருக்கிறது என தேடி வந்திருக்கிறேன். ஆறுநாள்கள் கூட்டங்களில் பங்கேற்று 7 ஆவது நாள் திருச்சியில் நிகழ்ச்சி என்றதுமே மனதில் உற்சாகம், இனம்புரியாத மகிழ்ச்சி. காரணம், இந்தி எதிர்ப்பு, தனித்தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கத்துக்கு விழிப்புணர்வு என வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக அர்ப்பணித்த கிஆபெ விசுவநாதன் பிறந்து, வாழ்ந்த திருச்சியில் நிகழ்ச்சி என்றதுமே மனதில் மகிழ்ச்சி.

உலகில் இன்று 7,105 மொழிகளும், இந்தியாவில் 880 மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. இதில் 2000 க்கும் மேலான மொழிகளை, ஆயிரத்துக்கும் குறைவான மக்களே பேசுகின்றனர்.

அதனால் விரைவில் அம்மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்துள்ளன.
சொந்த மக்களால் கைவிடப்படுதல், ஆதிக்க மொழிகளால் கழுத்து நெறிக்கப்படுதல், பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்தல், தாய்மொழியை மதிப்பு குறைவாக நினைத்தல் ஆகிய 4 முக்கியக் காரணங்களால் தான் மொழிகள் அழிகின்றன.

உலகில் 100 ஆண்டுகளில் அழிந்துவிடும் வாய்ப்புள்ள 25 மொழிகளில் தமிழ் 8 ஆவது இடத்தில் இருப்பதாக யுனெஸ்கோ கூறியிருப்பதாக 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஒரு கூட்டம் தவறான செய்திகளை பரப்பிவருகிறது. ஆனால் அப்படி ஒரு தகவலை யுனெஸ்கொ நிறுவனம் வெளியிடவில்லை. தமிழை யாராலும் அழிக்க முடியாது. அழிக்கவோ, சிதைக்கவோ மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்கக்கூடாது.
உலக அளவில் அதிகம் பேசப்படும் 10 மொழிகளில் தமிழ் இல்லை என்பது வருந்தக்கூடிய கசப்பான தகவல். ஆங்கிலம், சீனம், ரஷ்யன், ஸ்பெயின், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளை 10 கோடிக்கும் மேலான மக்கள் பேசுகின்றனர்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் 10 கோடிக்கும் மேல் உள்ளனர், அவர்கள் தமிழில் பேசுவதை உறுதி செய்ய வேண்டும். பிறமொழி பேசுபவர்களையும் தமிழை பேச வைக்க வேண்டும். தமிழை 10 கோடிக்கும் மேலான மக்களால் பேச வைக்கப்பட வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலையில் இரு தகவல்களை கேள்விப்பட்டதில் மகிழ்ச்சியாக உள்ளது. அதில் முதலாவது, வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் முதன்மைபடுத்தி எழுத தொழிலாளர் துறை உத்தரவிட்டிருப்பது. அடுத்தது, ஜப்பானியர்கள் தமிழில் பெயரை மாற்றியிருப்பதும் மேலும் தமிழ் வளர, திட்டை கோயிலில் சிறப்பு யாகம் நடத்தியதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழில் பெயர் பலகை அமைக்கும் வணிகர்களுக்கு நானே நேரில் சென்று பூங்கொத்து வழங்குவேன்.

பிரான்ஸ் நாட்டில் “தேங்க்யூ’ என்ற பிறமொழிச் (இங்கிலாந்து-ஆங்கிலம்) சொல் நுழந்ததற்கு, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் பெரும் மொழி புரட்சி ஏற்பட்டது. ஆனால், இங்கு 100 வார்த்தைகளில் 95 வார்த்தைகள் பிறமொழி கலப்பும், 5 வார்த்தைகள் மட்டுமே தமிழில் அதுவும் கொச்சைத் தமிழாக உள்ளது.

எனவே, பொதுமக்கள், தங்களின் உறவினர்கள், நண்பர்கள், தெருவாசிகள் அனைவரும் தமிழில் கலப்பின்றி பேசுவதை வழக்கமாக்க வேண்டும். தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள், தங்கள் பகுதியில் உள்ள மக்களை தமிழில் பேச வைக்கவேண்டும்.
தமிழகத்தில் உள்ள வணிகர்கள், தமிழில் பெயர்ப்பலகை அமைக்க வேண்டும் என்ற அரசின் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும். ஒரு திங்கள் (மாதம்) அவகாசம் தருகிறோம். இல்லாவிட்டால் ஒரு திங்கள் இடைவெளி விட்டு பின்னர் நாங்கள், கருப்பு மை, வாளி மற்றும் ஏணியுடன் வலம் வருவோம். தமிழை காக்க எங்களுக்கு வேறுவழியில்லை. அந்த நிலைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள். எனது இந்த பிரச்சார பரப்புரை விளம்பரத்துக்காகவோ, வாக்குகளுக்காகவோ அல்ல. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால், தமிழை வளர்க்க வேண்டியது எங்கள் கடமை என்றார் அவர்.

நிகழ்வில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். பாவாணர் தமிழியக்க அமைப்பாளர் கு.திருமாறன், உலக திறக்குறள் பேரவை துணை தலைவர் சு.முருகானந்தம், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் ஜவஹர் ஆறுமுகம் ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை உமாநாத், திலீப்குமார், பிரின்ஸ்,வினோத்,மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் கோவிந்தராஜ்,.சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். க.உமாநாத் வரவேற்றார். ரெ. செலஸ்டின் செல்வகுமார் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.