Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்சியில் குவிக்கப்பட்டுள்ள கரும்புகள்.

0

பொங்கல் பண்டிகையை ஒட்டி
திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள கரும்புகள்.
மஞ்சள் குலைகள், காய்கறி விற்பனையும் அமோகம்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

விவசாயிகளையும், விளைவித்த பொருட்களையும் மதிக்கும் திருநாள். நம் மண்ணில் விவசாயிகளால் விளைவிக்கப்படும் பொருட்களான சிறுகிழங்கு, பனங்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு கிழங்கு வகைகளையும், கரும்பு, மஞ்சள் குலை போன்ற விளை பயிர்களையும் மக்கள் வாங்கிச் சென்று வீட்டில் வைத்து வணங்கி பொங்கல் வைத்து கொண்டாடுவர்.

பொங்கல் பண்டிகையையொட்டி செங்கரும்பு ,மஞ்சள் குலைகள், பூக்கள் விற்பனை கடைவீதிகளில் களைகட்டி உள்ளது. குறிப்பாக கரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு காந்தி மார்க்கெட், கடைவீதிகளில் குவிக்கப்பட்டுள்ளன.

செங்கரும்பு சாகுபடி செய்த விவசாயி ஒருவர் கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை பாலக்குறிச்சி, கிளிக்கூடு, திருவளர்சோலை போன்ற கிராமங்களில் 100 முதல் 110 ஏக்கர் வரை செங்கரும்பு பயிரிடப்பட்டது.
திருச்சி மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள வியாபாரிகளும் பொங்கல் சீசனில் செங்கரும்பு கொள்முதல் செய்கின்றனர். ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக, செங்கரும்பு கொள்முதல் செய்துள்ளனர். திமுக அரசு இந்த ஆண்டு செங்கரும்பு கொள்முதல் செய்து ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கி உள்ளனர்.

அதை நம்பி இந்த ஆண்டும் செங்கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளிடம் 6 அடி உயர கரும்பு 30 ரூபாய் வரை கொள்முதல் செய்தனர்.

அதனால், வெளிமார்க்கெட்டில் ஒரு கரும்பு 50 முதல் 60 ரூபாய் வரை விலை வைத்து வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.

இடு பொருட்கள், ஆட்கள்கூலி என பத்து மாத பயிரான செங் கரும்பு சாகுபடி செய்ய, மூன்று லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம்.

இந்த ஆண்டு அரசு செங்கரும்பு கொள்முதல் செய்து உள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது.

திருச்சியில் வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கரும்பை கொள்முதல் செய்கின்றனர். பின்னர் வெட்டு கூலி, ஏற்று கூலி, போக்குவரத்து செலவு சேர்த்து ஒரு கரும்பு 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
10 கரும்புகள் கொண்ட கட்டு 400 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது.

இப்போது மார்க்கெட்டுகள், கடைகள், மார்க்கெட்டுகள்.மற்றும் மக்கள் கூடும் பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் கரும்பு கட்டுகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

.

இது போல் மஞ்சள் குலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.இது மட்டும் இன்றி கடைகளில் காய்கறி விற்பனையும் படுஜோராக நடந்து வருகிறது .காய்கறி விலை அதிகமாக இருந்தாலும் (உதாரணமாக வெண்டைக்காய் கிலோ ரூ.100) விற்பனையில் மந்தம் இல்லை.

Leave A Reply

Your email address will not be published.