Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நேரு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்.திருச்சியில் 48 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட மகிழ்ச்சியான தருணம்.

0

 

பள்ளி பருவத்தை நினைவு கூர்ந்த முதியோர். 48 ஆண்டுகளுக்கு பின் பேரக்குழந்தைகளுடன் சந்தித்து கொண்ட நெகிழ்ச்சி தருணம்.

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்காவில் அமைந்துள்ள புத்தனாம்பட்டி கிராமத்தில் உள்ளது நேரு மேனிலைப் பள்ளி.

இந்த பள்ளியில் 1973-74 ஆம் ஆண்டில் படித்த பழைய மாணவர்கள், தங்களது குடும்பத்துடன் பங்கேற்று, தங்களது பழமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டு உரையாடினர்.

ஏறக்குறைய, 48 ஆண்டுகள் கழித்து பலரும் ஒருவருக்கொருவரை சந்தித்துக் கொண்டு தங்கள் அன்பை பகிர்ந்தனர். வகுப்பு ஆசிரியர்களை நலம் விசாரித்தனர். பின்னர் நண்பர்களுடன் அமர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கினர்.

மாணவப் பருவத்தைப் போல மகிழ்ச்சியான பருவம் எதுவுமே இருக்காது. நீங்கா மகிழ்ச்சியையும், நினைவில்லா துக்கத்தையும் கொண்டதுதான் பள்ளி கால நினைவுகள்.

அந்த நினைவுகளை அவ்வப்போது நினைத்து பார்த்தால் நம்முடைய இளமையை மீட்டெடுக்கலாம்.
அதே நினைவுகளுடன் மீண்டும் சந்தித்தால் அதுவும் கணவர், மனைவி, குழந்தைகள், பேரன், பேத்திகளுடன் சந்தித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டால் எப்படி இருக்கும் அப்படி ஒரு சந்தோச தருணம் தான் திருச்சியில் 48 ஆண்டுகளை கடந்த மாணவர்களுக்கு கிடைத்தது.

பள்ளி பருவத்தில் சின்ன விசயத்திற்காக சேட்டை செய்து ஆசிரியரிடம் அடி வாங்கியது, நண்பனை போட்டு கொடுத்து அடிவாங்க வைத்தது, டூர் போனது, ஹோம் ஒர்க் செய்யாமல் பள்ளி அறையை விட்டு வெளியே போனது என நினைத்து பார்க்க எத்தனையே நிகழ்வுகள் உண்டு.

70 களில் ஆசிரியர்களுடன், நண்பர்களாக பழகிய மாணவர்கள்தான் அதிகம் உண்டு. இன்றைக்கு எப்படியோ அன்றைக்கு ஆசிரியர்கள் சொன்னதுதான் வேதவாக்கு அதையே இன்றைக்கும் நினைவில் வைத்து கடைபிடிக்கும் மாணவர்கள் இருக்கின்றனர்.

அந்த மாணவர்கள் ஒருங்கிணைத்து 48 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன் ஒருங்கிணைப்பாளர்களாக பழைய மாணவர்கள் தமிழ்செல்வன், ரெங்கராஜன், வைத்தீஸ்வரன் ஆகியோர் செயல்பட்டு, 48 ஆண்டுகள் கழித்து பழைய மாணவர்களை ஒரு மாத கடின உழைப்பிற்கு பிறகு இந்நிகழ்ச்சிக்கு வரவழைத்தனர்.

இதில், பெரும்பாலானோர், தங்களது மனைவி, குழந்தைகள், பேரன், பேத்திகளுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 50ம் ஆண்டு விழாவின் முன்னோட்டமாக, பழைய நண்பர்களை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது.

மாணவப் பருவத்தில் இருந்தவர்கள், இன்று தந்தையாக, அன்னையாக, அலுவலக மேலதிகாரியாக, ஆசிரியராக உயர்ந்துள்ளனர். தங்களின் பரபரப்பான பணிக்கு இடையேயும் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பறந்து வந்திருந்தனர்.

குடும்ப உறுப்பினர்களே நேரில் சந்தித்துக் கொள்ளாத இந்த நாளில், பள்ளி பருவ வயதை கடந்து, 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதிய பருவத்தில் சந்தித்துக் கொண்ட தருணம், நெகழ்ச்சியாக அமைந்தது.

Leave A Reply

Your email address will not be published.