Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பட்டதாரி வாலிபரை திருடன் என நினைத்து அடித்துக்கொன்ற 3பேர் கைது.

0

திருச்சி ஐடி பட்டதாரி வாலிபரை திருடன் என நினைத்து அடித்துக் கொன்ற மூன்று பேர் கைது.

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் பகுதியில் ஆஷாபுரா டிம்பர் சாமில் மர அறுவை மில் செயல்பட்டு வருகிறது.

இதில் நைஜீரியா, பர்மா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தேக்கு ,படாக், கோங்கு உள்ளிட்ட உயரிய மர வகைகள் இறக்குமதி செய்யப்பட்டுவீடு கட்டுமானத்திற்கும் கட்டில், பீரோ உள்ளிட்ட பர்னிச்சர் பொருள்களும் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 3ம் தேதி அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம
நபர் ஒருவர் மில்லில் நுழைந்து செல்போன் திருட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மில்லின் உரிமையாளர் அவரை விரட்டியுள்ளார்.

மீண்டும் அதே நபர் இரவு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த அசாமை சேர்ந்த சாமில் பணியாளர்கள் நான்கு பேர் திருடனை மடக்கி பிடித்து அங்கிருந்து மரத்தில் கட்டி வைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இதில் நெஞ்சு பகுதி வலது கை வலது கால் மற்றும் இடுப்பு உள்ளிட்ட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது , மேலும் மருத்துவ உதவி, உணவு, தண்ணீர் எதுவும் கொடுக்காமல் இரவு முழுவதும் கட்டி வைத்துள்ளனர். இதனால் வலி தாங்க முடியாமல் அந்த இளைஞர் இறந்தார்.

இது குறித்து மணிகண்டம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கொலை செய்யப்பட்டவர்
ஐ.டி. பட்டதாரி சக்கரவர்த்தி எனவும் இவர் திருச்சி துவாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு கைக்குழந்தை உள்ளது.
குடிப்பழக்கத்தினால் மனநலம் பாதிக்கப்பட்ட இவர் காணாமல் போன நிலையில் மணிகண்டம் பகுதியில் இவரை திருடன் என நினைத்து பணியில் இருந்த அசாம் மாநில ஊழியர்கள் சக்கரவர்த்தியை அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.

அதை தொடர்ந்து
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மர அறுவை மில் உரிமையாளர் திரேந்தர், அசாம் மாநில தொழிலாளர்களான பைசல் சாக் (வயது 36), யாசின் மப்ஜில் ஹுக்(வயது 28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.