அனைத்து வார்டுகளுக்கும் சரிசமமாக நிதி வழங்க வேண்டும்.திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி வலியுறுத்தல்.
திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேசினர் .பின்னர் கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
முத்து செல்வம்( திமுக):-
முதலமைச்சர் இன்று வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் கூட்டம் முக்கியமா? கூட்டத்தை ஒத்தி வையுங்கள்.
மேயர்அன்பழகன்:
சீக்கிரமாக கூட்டத்தை முடித்து விடலாம்
சுஜாதா (காங்கிரஸ்):-
45 தீர்மானங்கள் உள்ளது. தீர்மானத்தின் மீது பேசினால் எப்படி கூட்டத்தை சீக்கிரமாக முடிக்க முடியும்?
மேயர் அன்பழகன்:-
எந்த தீர்மானத்தின் மீது நீங்கள் பேசுகிறீர்களோ அந்த தீர்மானத்தை ஒத்தி வைத்து விடலாம். மற்ற தீர்மானங்களை நிறைவேற்றுவோம்
பிரபாகரன் (வி.சி.க ):–
ஆன்லைன் ரம்மி தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதிக்கும் கவர்னரை கண்டித்து மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் .மேலும் சட்டத்தை அமல்படுத்த வேண்டி திருச்சி மாநகராட்சி மூலம் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப வேண்டும்.
சுரேஷ் (சிபிஎம்):-
தேசிய நெடுஞ்சாலைகளில் துப்புரவு பணியாளர்களை வைத்து சுத்தம் செய்வதால் விபத்து ஏற்படுகிறது அதை தடுக்க வேண்டும்

மேயர் அன்பழகன்:-
முக்கிய வி.ஐ.பி.கள் வரும்போது இது தவிர்க்க முடியாதது. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
கோ.கு.அம்பிகாபதி (அதிமுக மாநகராட்சி தலைவர்) :-
திருச்சி மாநகராட்சி வரி வசூல் செய்வதில் முதலிடம் வகிக்கிறது. மகிழ்ச்சி தான் .ஆனால் எல்லா வாடுகளுக்கும் சரிசமமாக நிதியை பகிர்ந்து கொடுக்க வேண்டும். 180 ஏக்கர் கொண்ட செம்பட்டு பெரிய ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
சுரேஷ் (சி.பி.ஐ) :-
பாதாள சாக்கடை மேன்ஹோல் தரம் இல்லாமல் உள்ளது. இது பின்னால் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தரமான மேன்ஹோல் போட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோணக்கரை சுடுகாட்டை சீரமைக்க வேண்டும்.
கவிதா செல்வம் (திமுக):-
தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்
மேயர் அன்பழகன்:-
பாதி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். துப்புரவு தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிய மறுக்கிறார்கள். அவர்களை கவுன்சிலர்கள் கண்காணிக்க வேண்டும்.
பைஸ் அகமது (ம.ம.க)–
திருச்சி மாநகராட்சியில் வாகனங்கள் பற்றாக்குறை உள்ளது .போதிய வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலை ஓரம் வியாபாரம் செய்யும் தெருவோர வியாபாரிகள் கணக்கெடுப்பில் பாரபட்சம் காட்டக்கூடாது.
விஜயலட்சுமி கண்ணன் (கோட்டத் தலைவர்):-
10,11,28,29 ஆகிய வார்டுகளில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கநடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகளுக்கு அபராதம் விதிக்கும் அபராத தொகையை குறைக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து விவாதம் நடந்தது.
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 45 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. இதில் நான்கு தீர்மானங்கள் ஒத்திவைக்கப்பட்டு, மீதமுள்ள 41 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.