Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி என் ஐ டி 59 ம் கழக நாள் கொண்டாட்டம். ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பங்கேற்பு.

0

என்.ஐ.டி திருச்சி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் வழங்கும்
மையமாகத் திகழ வேண்டும் – ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநர் என்.ஐ.டி
திருச்சியின் 59ஆம் கழக நாளில் உரை.

தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சி (என்.ஐ.டி திருச்சி) 59
ஆம் கழக நாள் 2022 பார்ன்
ஹாலில், இந்திய தொழில்நுட்பக் கழகம், மெட்ராஸின் இயக்குநர் முனைவர்
காமகோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க , என்.ஐ.டி திருச்சி
இயக்குநர் முனைவர் ஜி அகிலா மற்றும் என்.ஐ.டி திருச்சியின் நிர்வாகிகள்
குழுத் தலைவர் பாஸ்கர் பட் ஆகியோர் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

மாணவர் மன்றத்
தலைவர் மாதவ் அகர்வால் வரவேற்புரை ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து, கல்வித்துறை முதல்வர் முனைவர் என்.குமரேசன், கடந்த
கல்வியாண்டின் அனைத்துத் துறைகளின் கல்வி சார்ந்த சாதனைகள் குறித்த
விரிவான அறிக்கையினை வழங்கினார்.
அனைத்து விவரங்களும் அறிக்கையில்
இடம்பெற்றிருந்தன. அதோடு மாணவர்களின் செயல்பாடுகள் வளாகத்தில்
முழுவீச்சுடன் நடைபெறத் தொடங்கிவிட்டன என்றார்.

கோவிட் பெருந்தொற்றின்
விளைவாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையினைத் தாண்டி, பணியமர்த்தல் சதவீதம்
இளங்கலை மாணவர்களுக்கு 90 ஆகவும், முதுகலை மாணவர்களுக்கு 85 ஆகவும்
இருப்பதைச் சுட்டிக்காட்டி, இது நிறுவனங்களுக்கு கழகத்தின் மீதுள்ள
மிகுந்த நம்பிக்கையினை வெளிப்படுத்துவதாகக் கூறினார்.

என்.ஐ.டி திருச்சி
தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை
முதலீட்டு நிறுவனத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த
கல்வியாண்டின் குறிப்பிடத்தக்க மைல்கல் என்றார்..

என்.ஐ.டி இயக்குநர் முனைவர் ஜி. அகிலா இயக்குநர் உரையில் பேசியபோது 2500 மாணவர்களை, 11 பகுதிகளாகக் கல்லூரி வளாகத்திற்குத்
திரும்ப அழைத்து வந்ததற்காக கல்வித்துறை, மாணவர் நலன் மற்றும் விடுதி
அலுவலகங்களின் உழைப்பினைப் பாராட்டினார். கழகத்தின் சாதனைகளைக்
குறித்துப் பேசுகையில், என்.ஐ.டி திருச்சி இந்திய அளவில் பொறியியல்
பிரிவில் 9-ஆம் இடமும், அனைத்து என்.ஐ.டிகளிடையே முதலிடமும்
பிடித்திருப்பதற்கு, என்.ஐ.டி திருச்சியின் என்.ஐ.ஆர்.எஃப் குழுவினரின்
பணியினைப் பாராட்டினார்.

புதிய கல்விக் கொள்கையின் வழியில்,
குறிப்பிடத்தக்க பணிகளாக ஒருங்கிணைந்த முதுகலை-முனைவர் படிப்புகளை
அறிமுகப்படுத்துவது தொடங்கப்பட்டுள்ளதையும், சிறந்த கல்லூரிகளிடையே
மதிப்பெண் பரிமாற்றத்திற்கான பணிகள் நடந்து வருவதையும் தெரிவித்தார்..
ரூ.
13 கோடி மதிப்பிலான நிதியுதவியுடன் கூடிய திட்டங்கள், ரூ. 3 கோடி
மதிப்பிலான ஆலோசனைப்பணிகள் மற்றும் 8 காப்புரிமைகள் ஆகியவை ஆசிரியர்களின்
தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி வல்லமையினைப் பறைசாற்றுவதாகத்
தெரிவித்தார்.

கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்து வருவதில் ,
வெவ்வேறு துறைகளுக்கான 6 கூடுதல் கட்டிடங்களும் புதிய 506 அறை வசதி கொண்ட
ஆடவர் விடுதியும் ரூ. 20 கோடி மதிப்பிற்கு
கற்றல்-கற்பித்தல் வசதிகள் மற்றும் கருவிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதும்
என்.ஐ.டி திருச்சியின் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டுவதாகக் கூறினார்.

பாஸ்கர் பட், தலைவர் டாடா சன்ஸ் நிறுவனம் மற்றும் என்.ஐ.டி
திருச்சி நிர்வாகிகள் குழுத் தலைவர் தலைமையுரை வழங்கினார்.

அவர்
பேசுகையில் சமீபத்திய வருடங்களில் , இந்தியாவில் ஸ்டார்அப்களுக்கான
சூழ்நிலை மிகவும் சாதகமாக உள்ளதாகக் கூறினார்.உள்நாட்டு தொழில்நுட்ப
வளர்ச்சிக்கும், பொருளீட்டுவதற்கும் ஸ்டார்அப்கள் மிகச்சிறந்த வாய்ப்பாக
அமைவதாகக் கூறினார். ஆன்லைன் தொழில்நுட்பங்களை எளிமைப்படுத்தி ,
எல்லோரும் அணுகும் வகையில் உருவாக்கி இந்தியர்கள் ஆன்லைன் கல்வி
பிரிவினையை உருவாக்கும் என்ற கருத்தினை உடைத்துள்ளனர் என்றார்.


கழக நாள் உரையினை இந்திய தொழில்நுட்பக் கழகம், மெட்ராஸ்- இன் இயக்குநர்
முனைவர் வீ.காமகோடி வழங்கினார். ‘சக்தி’ என்ற இந்தியாவிலேயே
உருவாக்கப்பட்ட நுண்செயலியின் உருவாக்கம் குறித்து உரையாற்றினார்.

மொபைல்
போன்கள், மற்ற மின்னணுக் கருவிகள் மற்றும் தேசியப் பாதுகாப்புக்
காரணங்களுக்காகவும் தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே உருவாக்க வேண்டிய
தேவை இருப்பதைக் கூறினார்.

இந்த ‘சக்தி’ திட்டமானது 2012 இல்
முன்மொழியப்பட்டு, 2017 இல் நிதியுதவி பெற்று மற்றும் சில மாதங்களிலேயே
பரிசோதிக்கப்பட்டது என்றார். 2014 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில்
என்.ஐ.டி திருச்சியின் 27 பயிற்சிப் பணி மாணவர்கள் சக்தி உருவாக்கத்தில்
ஈடுபட்டிருந்தைப் பாராட்டினார்.
21 நாட்களில் உருவாக்கப்பட்ட ஆரோக்கிய சேது செயலியினை எடுத்துக்காட்டி,
சைபர்-பிஸிகல் அமைப்புகளின் மிகுந்த ஆற்றல் குறித்துப் பேசினார். அதோடு,
புதிய கல்விக் கொள்கையின் முதன்மையான குறிக்கோளாக, புதிய
கண்டுபிடிப்புகளுக்கான பல்துறைக் கல்வியை வளர்ப்பதைக் கூறினார்.

என்.ஐ.டி திருச்சி மாணவர்களை வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக மாற
ஊக்குவித்த அவர், என்.ஐ.டி திருச்சி பிற நிறுவனங்களிலிருந்து
வேலைவாய்ப்புகளைத் தேடுவதை விட்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும்
வழங்கும் மையமாக மாற வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த கல்வியாண்டின் மாணவ சாதனையாளர்கள் சிறப்பு
விருந்தினரால் கவுரவிக்கப்பட்டனர். இளங்கலை மற்றும் முதுகலைப்
படிப்புகளில் அனைத்து துறைகளிலிருந்தும் முதல் மூன்று இடம் பெற்றவர்கள்
உட்பட 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருதளிக்கப்பட்டார்கள். 40 முன்னாள்
மாணவர்கள் விருதுகளும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சிறந்த
வெளிச்செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் மாதவ் அகர்வால் சிறந்த
வெளிச்செல்லும் மாணவர் விருதினைப் பெற்றார். வேதிப் பொறியியல் துறையின்
மானசலா ராகுல் ஆனந்த் சிதம்பரம் நினைவு விருதினைப் பெற்றார். உற்பத்திப்
பொறியியல் துறையின் சுவேஷா வெங்கடேஸ்வரன் சிறந்த வெளிச் செல்லும் மாணவி
விருதினைப் பெற்றார். முனைவர் படிப்பு மாணவர் கிருபாநிதி மற்றும் இளங்கலை
மாணவர் ஜெர்ரி சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதுகளையும், ஸ்ரீநிதி
சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதினையும் பெற்றார். உற்பத்திப்
பொறியியல் துறையின் பிரணேஷ் ராம் மற்றும் வேதிப் பொறியியல் துறையின்
தினகர் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளருக்கான விருதுகளைப்
பெற்றனர்.

வெவ்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 27 மாணவர்களுக்கு மானிய
விருதுகளும் வழங்கப்பட்டன.
மாணவர்களைத் தொடர்ந்து, பல்வேறு படிநிலைகளில் 26 சிறப்பாகப் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. உற்பத்திப் பொறியியல் துறையின்
முனைவர் ஆர் . ஆனந்த், முனைவர் எஸ்.பி.சிவப்பிரகாசம் மற்றும் மின்
மற்றும் மின்னணு பொறியியல் துறையின் முனைவர் சிஷாஜ் பி சைமன் ஆகியோர்
சிறந்த கண்டுபிடிப்பாளருக்கான விருதுகளைப் பெற்றனர். சிறந்த
கண்டுபிடிப்பாளர்களை கவுரவிக்கும் கழகத்தின் முடிவு, முன்னேற்றத்திற்கான
அறிகுறி என்று பாஸ்கர் பட் தமது உரையில்
குறிப்பிட்டிருந்தார்.
வெவ்வேறு துறைகளின் ஒன்பது முனைவர் படிப்பு மாணவர்களுக்கு வளரும்
ஆராய்ச்சியாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

ஆசிரியரல்லாத பணியாளர்களில்,
மேலாண்மை படிப்புகள் துறையின் மௌனிசாமி மற்றும் முதன்னை
அலுவலகத்தின் ராஜேந்திரன் ஆகியோர் தங்களது பங்களிப்புக்காக
விருதளிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டனர்.

சிறந்த துறைக்கான விருதினைப்
பொறியியல் பிரிவில் இயந்திரப் பொறியியல் துறையும், பொறியியல் அல்லாத
பிரிவில் வேதியியல் துறையும் பெற்றன. இரு துறைகளின் தலைவர்களும்
விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் மன்ற உறுப்பினர்கள்
அறிமுகப்படுத்தப்பட்டனர். கருவி மயமாக்கம் மற்றும் கட்டுப்பாட்டு
பொறியியல் துறையின் மாணவர் அகிலன் மாணவர் மன்றத்தின் புதிய தலைவராகவும்,
மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையின் மாணவி ஜெஸ்ஸி ஆண்ட்ரியா மாணவர்
மன்றத்தின் புதிய துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மாணவர்
மன்றத் துணைத் தலைவர் பூஜா ஸ்ரீனிவாசன், நிகழ்வினைச் சிறப்பாக
ஒருங்கிணைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.