திருச்சி ரேஷன் கடையில் வைத்த
நரேந்திர மோடி படம் உடைப்பு;
பா.ஜ.க. -திமுகவினர் இடையே மோதல்.
திருச்சி பொன்நகர் செல்வ நகர் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையில் கடையின் விற்பனையாளர் சுகுமார் மற்றும் எடையாளர் தாமோதரன் ஆகியோர் வழக்கம் போல் இன்று பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் கண்டோன்மண்ட் மண்டல பாஜக தலைவர் பரமசிவம் தலைமையில் பாஜகவினர் திடீரென ரேஷன் கடைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கையில் எடுத்து வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை கடை சுவற்றில் மாட்டினர்.
இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி மாநகராட்சி திமுக கவுன்சிலர் ராம்தாஸ் மற்றும் சில திமுக நிர்வாகிகள் ரேஷன் கடைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் நரேந்திர மோடி படத்தை வைத்த பாஜகவினர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையே சிலர் கடைக்குள் புகுந்து மோடியின் படத்தை தூக்கி வந்து நடுரோட்டில் உடைத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ரேஷன் கடைகள் வைக்கப்பட்ட நரேந்திர மோடி படம் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாநகராட்சியில் பல பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நரேந்திர மோடி படம் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்த தள்ளு முள்ளில் பாஜக மண்டல் தலைவர் பரமசிவம் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.