திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம். “ஓம்சக்தி.. பராசக்தி..” கோஷங்கள் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்துவர்,
இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இறுதியிலிருந்தும மக்களின் நலனுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது வழக்கம். இக்காலங்களில் அம்மனுக்கு பக்தர்களால் பூச்செரிதல் நடைபெறும்.
பூச்செரிதலையடுத்து சித்திரை மாதம் முதல் செவ்வாய்கிழமை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும்.
அதன்படி அம்மன் பட்டினி விரதம் முடிவடைந்து, சித்திரை தேர்திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து அம்பாள் தினமும் சிறப்பு அலங்காரத்தில் சிம்மவாகனம், பூதவாகனம், அன்னவாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 10.30 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது.
முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின் மூலஸ்தானத்திலிருந்து அம்மன்(உற்சவர்) புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் மிதுன லக்கனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவிலை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷமிட்டவாறு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் சென்று, முக்கிய வீதிகளின் வழியாக வலம்வந்து பின்னர் நிலையை அடையும். விழாவின்போது ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தேரோட்டத்தினைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
சமயபுரம் தேர் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இன்று உள்ளுர் விடுமுறை அளிக்கபட்டுள்ளது .