வயலூர், அந்தநல்லூர் பகுதிகளில் சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சாய்ந்தன
திருச்சியை அடுத்த அந்தநல்லூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பிச்சாவரம், கீழ்பத்து, முள்ளிகரும்பூர், பேரூர், குழுமணி, உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்தது.
குலைதள்ளிய நிலையில் வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது பற்றி வாழை விவசாயி ஒருவர் கூறுகையில், குலைதள்ளிய நிலையில் சூறாவளி காற்றால் வாழைகள் சாய்ந்துள்ளன. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றார்.
இதேபோல் சோமரசம்பேட்டை பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த காற்றால் இதில் வயலூர், சோமரசம்பேட்டை பகுதிகளில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
இது குறித்து தகவல் அறிந்த மணிகண்டம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மருதமுத்து சந்திரன், வருவாய் கிராம தோட்டக்கலை துறை உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அதிகாரி நாராயணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.