வைகையில் வந்த வெள்ளத்தை விட மக்கள் வெள்ளம் கூடியிருக்க பச்சைப்பட்டு உடுத்தி தங்கக் குதிரை மீதேறி வந்து வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கம்பீரமாக தங்கக் குதிரை மீதேறி வந்த அழகரை பல லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் விண்ணை எட்டியது.
மதுரையின் பிரசித்தி பெற்ற திருவிழா சித்திரை திருவிழா. உலகப்புகழ் பெற்ற அந்த திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் திக் விஜயம், மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நேற்றைய தினம் தேரோட்டமும் கோலாகலமாக நடந்தது. சித்திரைத் திருவிழாவின் பெருமையை அதிகரிக்கும் வகையில் சுந்தரராஜப்பெருமாளான கள்ளழகர், கடந்த 14ம் தேதி அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி அதிர்வேட்டு முழங்க ஆர்ப்பாட்டமாகக் கிளம்பினார். வரும் வழியில் நானூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி, நேற்று காலை மதுரை வந்து சேர்ந்தார்.
தங்கப்பல்லாக்கில் கண்டாங்கி பட்டு கட்டு வேல் கம்புடன் கள்ளழகர் கோலத்தில் மதுரைக்கு வந்த கள்ளழகருக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை வந்த கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். சர்க்கரைக் கிண்ணத்தில் தீபம் ஏற்றி எதிர்கொண்டு வரவேற்று வணங்கினர்.
தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளியவர், இரவு முழுவதும் மக்களுக்கு ஆசி வழங்கி, பின்னர் நூபுரகங்கை தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட அழகர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டு இன்று அதிகாலை மூன்று மணிக்குத் தங்கக்குதிரையில் ஏறி 5 மணிக்கு வைகை ஆற்றுக்கு வந்துசேர்ந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் விசிறிகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் வரவேற்றனர்.
வைகை ஆற்றுக்கு தங்கக் குதிரைவாகனத்தில் ஏறி வந்த கள்ளழகரை வெள்ளிக்குதிரை மீதேரி வந்த வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார். அதன் பின்பு, 6 மணியளவில் பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகையில் இறங்கினார். இந்த அரிய காட்சியைப் பார்க்க அங்குத் திரண்டிருந்த மக்கள் உற்சாகத்துடன் அவர் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, பூக்களைத் தூவி பரவசமடைந்தனர்.
நல்ல மழை பெய்து வைகை ஆற்றில் இந்த ஆண்டு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வைகை ஆற்றில் சிறப்பாக மண்டகப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. வீர ராகவப்பெருமாள் மண்டகப்படி, இந்து சமய அறநிலையத்துறை மண்டகப்படி அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வெள்ளத்திற்கு நடுவே தங்கக் குதிரை மீதேறி வந்த கள்ளழகர் வைகையில் எழுந்தருளி அருள்பாலித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கோவிந்தா…கோவிந்தா என முழக்கமிட்டும் வணங்கினர்.
அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது – கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கையாகும்.