புதுக்கோட்டை மாவட்டம் கவரப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (வயது 36)
இவர் 50 சதவிகித பார்வை மாற்றுத்திறனாளி. கவரப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது பதுக்கப்படுவதும், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த 15-ம் தேதி இரவு விராலிமலை காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்ட சங்கர், எங்கப் பகுதியில வெளிப்படையாகவே அதிக விலைக்கு மது விற்பனை செய்யுறாங்க. அவங்க மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
சங்கரின் புகார் குறித்து பெண் காவலர் ஒருவர் சக காவலர்களிடம் கூற, உடனே முதல்நிலைக் காவலர் செந்தில், காவலர்கள் பிரபு, அசோக் ஆகியோர் கவரப்பட்டி சென்று, அங்கு மாற்றுத்திறனாளி சங்கரை கன்னத்தில் அறைந்ததோடு, எங்கு விற்பனை நடக்கிறது ? அதைக் காட்டு என்று சொல்லி மிரட்டி அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சங்கர்
அங்கே காவலர்கள் சங்கரை ஒரு மரத்தில் சாய்த்து, லத்தி, பூட்ஸ் காலால் கை, கால், இடுப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலமாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தாங்குதலில் காயமடைந்த சங்கர், விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
சங்கரை காவலர்கள் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், விராலிமலை இன்ஸ்பெக்டர் பத்மா நீ என்ன காந்தியா ? என்று சங்கரை ஒருமையில் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
சங்கரின் நிலை குறித்து அறிந்த அவரின் தாய், உடனடியாக வக்கீல் ஒருவரின் உதவியுடன் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி-யிடம் புகாரளித்து, இந்தச் சம்பவத்தை அவர் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.
அதையடுத்து திருச்சி மண்டல ஐ.ஜி உடனே இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபனுக்கு உத்தரவிட்டார். பின்னர், சம்பந்தப்பட்ட காவலர்கள் இரவோடு, இரவாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது மாற்றுத்திறனாளியை காவலர்கள் தாக்கியது உறுதி செய்யப்பட்டிருப்பதால், சங்கரைத் தாக்கிய மூன்று காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். கள்ளச் சந்தையில் நடக்கும் மது விற்பனையைக் கட்டுப்படுத்த, புகார் அளித்த மாற்றுத்திறனாளியை போலீஸார் தாக்கியுள்ள சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காயமடைந்த சங்கர்
இந்தச் சம்பவம் தொடர்பாக சங்கரின் உறவினர்கள் கூறியபோது.. எங்கப் பகுதியில கள்ளச்சந்தையில ஆங்காங்கே அதிக விலைக்கு மது விற்பனை நடக்குது. அதனால, ஸ்கூலுக்கு போற பிள்ளைங்க ரொம்ப பயப்படுறாங்க. அவங்க இதுசம்பந்தமா சங்கர் கிட்ட தொடர்ந்து சொல்லிகிட்டே இருந்தாங்க. அதனாலதான், சங்கர் இந்த விவகாரத்தை போலீஸுக்கு தெரியப்படுத்தினான்.
சட்டவிரோதமா மது விற்கிறாங்கன்னு போலீஸ்கிட்ட சொன்னது ஒரு குத்தமாய்யா… மாற்றுத்திறனாளின்’னு கூட பார்க்காம மரத்துல சாய்ச்சி, பூட்ஸ் கால்’லயும், லத்தியிலயும் அடிச்சி சித்ரவதை செஞ்சிருக்காங்க. மது கடத்துறவங்களுக்கு ஆதரவா செயல்படுற காவலர்களை வெறும் சஸ்பெண்டோட இல்லாம, டிஸ்மிஸ் மாதிரியான கடுமையான நடவடிக்கை எடுக்கணும் என கூறினார்.
இந்த நிலையில், “உங்களால தான் சார் இந்த பிரச்னைய முடித்து வைக்கமுடியும். சம்பவம் நடந்திருச்சு, ஓரிடத்துல இதுமாதிரி நடந்ததால டோட்டலா டிபார்ட்மெண்ட் அசிங்கப்படக்கூடாதுன்னு தான் பேசுறேன். எங்களால ஒரு பிரச்னை வந்துச்சுன்னு இருக்க வேண்டாம். கோர்ட்க்கு எல்லாம் போக வேண்டாம் சார்” என ஐ.ஜி-யின் பார்வைக்குத் தகவலைக் கொண்டு சென்ற சம்பந்தப்பட்ட வக்கீலிடம், விராலிமலை பெண் இன்ஸ்பெக்டர் வலியிறுத்தும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.