Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொள்ளை நாடகமாடிய ரயில்வே டிக்கெட் கவுண்டர் வடநாட்டு ஊழியர் மனைவியுடன் கைது.

0

 

சென்னை திருவான்மியூர் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் ஊழியரிடம் துப்பாக்கி முனையில் ரூ.1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ரெயில்வே போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் அந்த ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டர் ஊழியரே மனைவியுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

திருவான்மியூர் ரெயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் பயணிகள் சிலர் டிக்கெட் எடுப்பதற்காக தரை தளத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் வரிசையில் காத்திருந்தனர்.

தினசரி அதிகாலை 4 மணிக்கே திறக்கப்படும் டிக்கெட் கவுண்ட்டர் நேற்று திறக்கப்படாமல் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த பயணிகள், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசாரிடம் இதுபற்றி கேட்டனர்.

உடனே அங்கு வந்த ரெயில்வே போலீசார், வெளியே பூட்டப்பட்டிருந்த கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, டிக்கெட் கவுண்ட்டர் உள்ளே ஊழியர் ஒருவர், அங்கிருந்த சேரில் கை, கால்களை பின்னால் கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து திணிக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது வாயில் இருந்த துணியை எடுத்து விட்டு கை, கால் கட்டுகளை அவிழ்த்த ரெயில்வே போலீசார், இதுபற்றி அவரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் தன்னை முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு விட்டு டிக்கெட் விற்பனை செய்து வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறினார்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு ரெயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர்.

ரெயில்வே டி.ஐ.ஜி. ஜெயகவுரி, சென்னை மண்டல எஸ்.பி. அதிவீரபாண்டியன், சென்னை ரெயில்வே கோட்ட பாதுகாப்புப்படை கமிஷனர் செந்தில்குமரேசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

சம்பவம் நடந்த இடம், ரெயில் நிலைய நடைமேடைகளை ஆய்வு செய்த போலீஸ் அதிகாரிகள், ரெயில்வே ஊழியரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘தனது பெயர் டீக்காராம் மீனா (வயது 28) என்றும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த 4 ஆண்டுகளாக தெற்கு ரெயில்வேயில் டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:-

அதிகாலை 4.10 மணிக்கு முதல் ரெயில் என்பதால் நான் அதிகாலை 3.50 மணிக்கே டிக்கெட் கவுண்ட்டரை திறந்துவிடுவேன். இன்றும் (நேற்று) வழக்கம்போல டிக்கெட் கவுண்ட்டரை திறப்பதற்காக பின்புறம் வழியாக உள்ளே நுழைந்தேன். திடீரென என் பின்னால் வந்த முகமூடி அணிந்த 3 பேர், என்னை பிடித்து டிக்கெட் கவுண்ட்டர் அறைக்குள் தள்ளினார்கள். நான் சுதாரிப்பதற்குள், அதில் ஒருவர் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு, சத்தம் போட்டால் சுட்டு விடுவேன் என மிரட்டினார்.

அதனால் நான் உயிர் பயத்தில் சத்தம் போடவில்லை. பின்னர் 3 பேரும் சேர்ந்து என்னை கட்டிப்போட்டு, வாயில் துணியை திணித்துவிட்டு, டிக்கெட் விற்பனை செய்து வைத்திருந்த ரூ.1.32 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு, கதவையும் வெளிபக்கமாக பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைத்து சோதனை மேற்கொண்ட திருவான்மியூர் ரெயில்வே போலீசார், இதுபற்றி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், டிக்கெட் கவுண்டரில் பணியாற்றும் ஊழியரான வடமாநிலத்தை சேர்ந்த டீக்காராமே தனது மனைவியுடன் சேர்ந்துகொண்டு பணத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடியது தற்போது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து டீக்காராமையும், அவரது மனைவியையும் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ரெயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததை பயன்படுத்திக்கொண்ட டீக்காராம் தனது மனைவியுடன் இணைந்து இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

நேற்று அதிகாலை டீக்காராம் ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர் சென்ற சில நிமிடங்களில் அவரது மனைவி சரஸ்வதி பின் தொடர்ந்து ரெயில் நிலையம் சென்றுள்ளார்.

அங்கு டிக்கெட் விற்பனை செய்து வைத்திருந்த ரூ.1.32 லட்சம் பணத்தை டீக்காராம் தனது மனைவியிடம் எடுத்துக்கொடுத்துள்ளார். மேலும், கொள்ளைப்போனது போல பிம்பத்தை உருவாக்க மனைவியை தனது கை, கால்காளை கட்டிவிட்டு வாயில் துணியை வைத்து செல்லும்படி கூறியுள்ளார்.

இதனையடுத்து, டீக்காராமின் மனைவி தனது கணவன் கூறியபடி அவரது கை,கால்களையும், வாயையும் கட்டிவிட்டு ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

ரெயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாதபோது அதற்கு அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் டீக்காராமும், அவரது மனைவியும் ரெயில் நிலையத்திற்குள் செல்வதை கண்டுபிடித்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரெயில்வே பணம் ரூ. 1.32 லட்சத்தை தாங்களே கொள்ளையடித்துவிட்டு கொள்ளைப்போனதாக நாடகமாடியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, ரெயில்வே ஊழியரான வடமாநிலத்தை சேர்ந்த டீக்காராமையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரெயில்வே பணம் ரூ.1.32 லட்சத்தை போலீசார் மீட்டுள்ளனர். மேலும், கைது

செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில்வே டிக்கெட் பணத்தை கொள்ளையடித்துவிட்டு வேறு யாரோ கொள்ளையடுத்துவிட்டதாக வடமாநில ரெயில்வே ஊழியர் நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.