மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால்அரியலூர் மாணவி தற்கொலை. திருச்சியில் பாஜகவினர் சாலை மறியல் 140 பேர் கைது.
அரியலூர் மாணவி உயிரிழப்பு:நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில்
பா ஜ க வினர் சாலை மறியல் : 140 பேர் கைது.
அரியலூர் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில் பா ஜ க சார்பில் 4 இடங்களில் நேற்று இரவு சாலை மறியல் நடைபெற்றது. இதில் 140 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகள் லாவண்யா (வயது 17). இவர் தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகேயுள்ள மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், அங்குள்ள விடுதியில் தங்கியிருந்து 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் அவர் , ஜனவரி 9 ஆம் தேதி பூச்சி மருந்து குடித்த நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் புதன்கிழமை (ஜனவரி 19ஆம் தேதி) உயிரிழந்தார்.
இது தொடர்பாக பூதலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும், பா ஜ க வினர் மற்றும் மாணவியின் பெற்றோர் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பா ஜ க சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
திருச்சியில் அரியமங்கலம் ரவுண்டானா, மத்திய (திருவள்ளுவர்) பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் ஆகிய 4 இடங்களில் சாலை மறியல் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதில், பா ஜ க திருச்சி மாவட்டத் தலைவர் ராஜசேகர் தலைமையில் அரியமங்கலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல மத்திய பேருந்து நிலைய பகுதியில் மறியலில் ஈடுபட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீராம் தலைமையிலான 25 பேர், சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் வி எச் பி மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் 30 பேர், ஸ்ரீரங்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையிலான 20 பேர் என மொத்தம் 140 பேரை திருச்சி மாநகர போலீசார் கைது செய்தனர்.