தமிழகத்தில் தீபாவளி அன்றும் மழை இருக்கும். வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
தமிழகத்தில் தீபாவளி அன்றும் மழை இருக்கும். வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் கடந்த 2 தினங்களாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்து இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக இன்றும் (புதன்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
குமரிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
இது இன்று மேற்கு திசையில் நகர்ந்து, தென் கிழக்கு அரபிக்கடல் நோக்கி செல்லும்.
கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று முன்தினம்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 4 இடங்களில் மிக கனமழையும், 10 இடங்களில் கனமழையும் பெய்து இருக்கிறது.
அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 20 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக அடுத்த 24 மணி நேரத்திலும் (இன்று) பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், பிற பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் மாதத்தில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 29 சதவீதம் அதிகம்.
கடந்த 20 ஆண்டுகளை பொறுத்தவரையில், 6-வது முறையாக அக்டோபர் மாதத்தில் அதிக மழை பெய்திருக்கிறது. அந்தவகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் 18 மாவட்டங்களில் இயல்பைவிட சற்று அதிகமாகவும், 7 மாவட்டங்களில் மிக அதிக மழையும் பெய்துள்ளது.
அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் இயல்பைவிட 113 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.
தீபாவளி தினத்தன்று தமிழகம், புதுச்சேரியில் ஓரளவுக்கு மழை இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.