புனே அருகில் உள்ள பிரன்கட் பகுதியில் எஸ்.வி.எஸ். அக்வா டெக்னாலஜிஸ் என்ற கெமிக்கல் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இக்கம்பெனியில் குளோரின் டை ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. இது தண்ணீரை சுத்தப்படுத்த பயன்படுகிறது. இக்கம்பெனியில் அதிக அளவில் பெண்கள் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், கம்பெனியில் நேற்று பிற்பகல் திடீரென ஒரு மெஷின் வெடித்து தீப்பிடித்துக்கொண்டது. இதில் ஊழியர்கள் அனைவரும் தீயில் சிக்கிக்கொண்டனர். தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.
தீயணைப்பு துறையினர் உள்ளே சென்று உள்ளே சிக்கியவர்களை மீட்க முயன்றனர்.
ஆனால் அதற்குள் தீ முழுவதுமாக அனைத்து பகுதிக்கும் பரவிவிட்டது. 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீ அணைக்கப்பட்ட போதும் உள்ளே சிக்கிக்கொண்டவர்களை தேடியதில் 18 பேரின் உடல்கள் எரிந்த நிலையில் அடையாளமே காண முடியாத நிலையில் மீட்கப்பட்டது.
அதில் 15 பேர் பெண்கள் . அவர்களது உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சி தலைவர் ராஜேஷ் தேஷ்முக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒருவர் மட்டும் காயத்துடன் தப்பினார். அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட துணை முதல்வர் அஜித் பவார், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
உள்ளே இருந்த இயந்திரங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டது.