எங்கள் நிறுவனத்தில் கொரோனாவால் யாராவது உயிரிழந்தால். 60 வயது வரை குடும்பத்திற்கு சம்பளம். டாடா ஸ்டீல் அறிவிப்பு
தங்களது நிறுவன ஊழியர் யாரேனும் கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அந்த ஊழியரின் குடும்பத்திற்கு 60 வயது வரை முழுச் சம்பளம் வழங்கப்படும் என டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக வேட்டையாடி வருகிறது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 3,511 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 07 ஆயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி உருக்கு நிறுவனமான டாடா ஸ்டீல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாடா ஸ்டீல் நிறுவன ஊழியர்கள் யாரேனும் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தால், அவரின் குடும்பத்திற்கு ஊழியர் ஓய்வு பெறும் 60 வயது வரையில் அவரின் சம்பளம் முழுமையாக ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் ஊழியரின் குடும்பத்திற்கு மருத்துவக் காப்பீடு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்படுவதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.
மேலும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்கள ஊழியர் யாரேனும் கொரோனா மூலம் உயிரிழந்தால், ஊழியரின் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை பட்டம் பெறும் வரையில் நிர்வாகமே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.