கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து இன்று மதுரை, திருச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.
மதுரையிலிருந்து வரும் வழியில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் உள்ள ராஜீவ் காந்தியின் திருவுருவச் சிலைக்கு அவர் 30வது நினைவு நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
பின் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் 400 புதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 100 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து திருச்சி பேருந்து நிலையம் அருகே கொரோனா சிகிச்சைக்காக தயார் செய்யப்பட்டுள்ள திருமண மண்டபத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
*என்.ஐ.டி.யில் 360 படுக்கை*
பின்னர், துவாக்குடியில் உள்ள திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரி (என்.ஐ.டி.) வளாகத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்தார்.
அங்கு கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் 360 படுக்கைகளுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 50 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைக்க மு.கஸ்டாலின் வந்தார். அவருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை அளவீடு செய்யப்பட்டது.
மேலும் சானிடைசர் மூலம் கைகளின் உள், வெளிப்புறம் நன்றாக தடவிக்கொண்டார்.
கபசுர குடிநீர் அருந்தினார்
அங்கு சித்த மருத்துவ மூலிகை கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. அதைபார்வையிட்ட மு.க.ஸ்டாலின் கபசுரகுடிநீர் அருந்தினார்.
அதன் பின்னர், கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்து அவர் ஆய்வு செய்தார். பின்னர், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து டாக்டர்களுடன் கலந்தாலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின்போது, தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, எம்.பி.க்கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர் மற்றும் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, கதிரவன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் பலரும் கலந்து கொண்டனர்.