தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. ஆஸ்பத்திரிகள் கொரோனா தொற்று நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. கொரோனா தொற்றால் உயிர் இழப்புகளும் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
எனினும், கொரோனா தொற்றின் வேகம் குறையாத காரணத்தால் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
அப்போது, மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது.
பின்னர், ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு,
கடந்த 15-ந் தேதி முதல் மளிகை,காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இந்தநிலையில். தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 35,579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 397 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
24ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடையும் நிலையில், முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில்
கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளின் கருத்து கேட்கிறார். தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது நாளை முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பெருந்தொற்றின் பேரபாயத்தை உணர்ந்து பொதுமக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இருந்து மருத்துவ காரணங்களை தவிர்த்து பிற எந்த காரணங்களுக்காகவும் வெளியில் வராமல் இருந்தால் தான் கொரோனாவில் இருந்து தங்களை காத்துக் கொள்வதுடன், பிறருக்கும் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தி முழு ஊரடங்கு இல்லாத நிலையை உருவாக்க முடியும் என்பது நிதர்சனம்.