1,500 விலையுள்ள ரெம்டெசிவிரை ரூ.23,000க்கு விற்க முயற்சி: தஞ்சாவூரில் 3 பேர் கைது.
கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதில் முக்கியமான மருந்தாக ரெம்டெசிவிர் கருதப்படுகிறது. இந்த மருந்து பற்றாக்குறையாக இருப்பதால், கள்ளச்சந்தைகளில் பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் உள்ளன.
இதைத் தடுக்கத் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூரில் சிலர் ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாகக் காவல் துறையினருக்கு புகார் சென்றது.
இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல், குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் கோட்டைச்சாமி, உதவி ஆய்வாளர் சங்கீதா உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், டான்டெக்ஸ் ரவுன்டானா அருகே சிலர் ரெம்டெசிவிர் மருந்து விற்க முயற்சி செய்வதாகத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், செவ்வாய்க்கிழமை நிகழ்விடத்துக்குக் காவல் துறையினர் சென்று, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற 3 பேரைப் பிடித்து விசாரித்தனர்.
இதில், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வரும் காரைக்கால் மாவட்டம், வாஞ்சூரைச் சேர்ந்த கிஷோர்குமார் (வயது 20), இவரது நண்பர்களான அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் மேல மைக்கேல்பட்டியைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் கிறிஸ்டோபர் (வயது 20), தஞ்சாவூர் ஞானம் நகரைச் சேர்ந்த லோகநாதன் மகன் கார்த்திக் (வயது 20) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்களிடமிருந்து காவல் துறையினர் ரெம்டெசிவிர் 7 குப்பிகளைப் பறிமுதல் செய்தனர். கிஷோர்குமார், தான் வேலை பார்க்கும் தனியார் மருத்துவமனையில் இருந்து இம்மருந்துகளை எடுத்து வந்து கள்ளச்சந்தையில் விற்க முயன்றுள்ளார்.
ஒரு குப்பியின் விலை ரூ.1,500 உள்ள நிலையில், அதை வெளியில் ரூ.23,000க்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து கிஷோர்குமார், கிறிஸ்டோபர், கார்த்திக் ஆகியோரைக் கைது செய்தனர்.