இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் நிரம்பி வருவதால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் திணறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளது.
இதனால் அந்தந்த மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் பகுதிநேர ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஆனாலும் வைரஸ் பாதிப்பு சற்றுதான் குறைந்து இருக்கிறது. கொரோனாவை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவர மேலும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் 10 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் ஊரடங்கை தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. பரிசோதனை செய்யப்படும் மாவட்டங்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக பாசிட்டிவ் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வேண்டும்.
தற்போது இந்தியாவில் 718 மாவட்டங்களில் கொரோனா சோதனை செய்யப்படுபவர்களில் 10 சதவீதத்துக்கு அதிகமாக பாசிட்டிவ் விகிதம் உள்ளது. இதில் டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்கள் அடங்கும்.
அதிக எண்ணிக்கையில் தொற்று பரவலை கொண்டிருக்கும் மாவட்டங்களில் மேலும் 6 முதல் 8 வாரங்கள் வரை முழு ஊரடங்கு இருக்க வேண்டும்.
10 சதவீதம் வரை பாதிப்பு உள்ள மாவட்டங்களில் உடனே முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். தொற்று பாதிப்பு 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்த பிறகுதான் ஊரடங்கை தளர்த்த வேண்டும்.
பாதிப்பை குறைப்பதற்கு 8 வாரங்கள் வரை முழு ஊரடங்கை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். அதற்கு குறைவான காலகட்ட ஊரடங்கில் பாதிப்பை குறைப்பது என்பது நடக்காது.
தலைநகர் டெல்லி கொரோனா பாதிப்பால் அதிகமாக பாதிக்கபட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 சதவீதமாக இருந்தது. தற்போது 17 சதவீதமாக குறைந்து இருக்கிறது.
டெல்லியில் இன்னும் சில மாதங்களுக்கு ஊரடங்கு தேவை. நாளையே டெல்லி திறந்துவிடப்பட்டால் பேரழிவு தான் ஏற்படும். கடந்த ஏப்ரல் 15-ந்தேதி கொரோனா வைரஸ் தொடர்பான தேசிய பணிக்குழு கூட்டம் நடந்தது.
அதில் 10 சதவீதம் அல்லது அதற்கு அதிகமான பாதிப்பு விகிதம் உள்ள பகுதிகளில் உடனடியாக பொது முடக்கம் அமல்படுத்துமாறு பரிந்துரை செய்தோம். ஆனால் ஊரடங்கு என்பது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் கவனம் இருக்க வேண்டும் என்று அரசு தெரிவித்தது.
எங்களது பரிந்துரையை அரசு ஏற்றுக்கொள்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டது என்று நினைக்கிறேன். ஆனால் பின்னர் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.