மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தோ்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. அங்கு முதல்கட்டத் தோ்தல் கடந்த மாதம் 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தோ்தல் கடந்த 1-ஆம் தேதியும், 3-ஆம் கட்டத் தோ்தல் கடந்த 6-ஆம் தேதியும் நடைபெற்றன.
மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு திரிணமூல், பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. முக்கியமாக, திரிணமூல்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஹௌராவின் 9 தொகுதிகள், தெற்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகள், அலிபுா்தாரில் உள்ள 5 தொகுதிகள், கூச்பிஹாரின் 9 தொகுதிகள், ஹூக்ளியில் 10 தொகுதிகள் என 44 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
மொத்தமுள்ள 44 தொகுதிகளிலும் 373 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் பெண் வேட்பாளர்கள் 50 பேர். வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக மொத்தம் 15,940 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,15,81,022 வாக்காளர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்றும், அதில், பெண் வாக்காளா்கள் 56.94 லட்சம் பேர், மூன்றாம் பாலினத்தவா்வர்கள் 293 பேர்.
மொத்தமுள்ள 44 தொகுதிகளிலும் திரிணமூல், பாஜக கட்சிகள் போட்டியிடுகின்றன. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 22 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், மற்ற கூட்டணிக் கட்சிகள் மீதமுள்ள இடங்களிலும் போட்டியிடுகின்றன.
திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் மாநில அமைச்சா்கள் பாா்த்தா சாட்டா்ஜி, அரூப் விஸ்வாஸ் உள்ளிட்டோா் களத்தில் உள்ளனா். மத்திய அமைச்சா் பாபுல் சுப்ரியோ போட்டியிடும் தொகுதியிலும் தோ்தல் நடைபெறுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் பானா்ஜி உள்ளிட்ட சிலா் பாஜக சாா்பில் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.
மாநிலத்தில் இதுவரை நடந்து முடிந்த மூன்று கட்டத் தோ்தலிலும் பெரிய அளவிலான வன்முறைகள் எதுவும் நிகழவில்லை. 2-ஆம் கட்டத் தோ்தலின்போது முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் மட்டும் சில சம்பவங்கள் நடைபெற்றன.
4-ஆம் கட்டத் தோ்தலை எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் நடத்துவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
மாநிலத்தில் 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 15,940 வாக்குச்சாவடிகளும் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு மத்திய படைப் பிரிவைச் சோ்ந்த 789 குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி தோ்தலை நடத்துவதற்குத் தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கை சுத்திகரிப்பான்கள் வழங்கப்படவுள்ளன. வாக்காளா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு பின்னர் வாக்களிப்பதற்கு வாக்காளா்களுக்குக் கையுறைகள் வழங்கப்படுகின்றன.
மே 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கபடும்.