Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வெளியூர் செல்ல பஸ் இல்லாததால் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நள்ளிரவு பயணிகள் தர்ணா

0

திருச்சியில் இருந்து வெளியூர்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்பு : நள்ளிரவு மத்தியபஸ் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாக்காளர்கள் வாக்களிக்க செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

மேலும் பல இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு பஸ்கள் இயங்கின.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்வதற்காக, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்தனர்.

வாக்குப்பதிவு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு முடிந்தது. வெளியூரிலிருந்து வாக்களிக்க வந்தவர்கள், தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். அதன் பின்னர் பணி நிமித்தமாக வெளியூர்களுக்குச்செல்ல திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தனர்.

ஆனால் அங்கு வெளியூர்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் தவிப்புக்கு உள்ளானார்கள். நள்ளிரவு வேளையில் சிறப்பு பஸ் நிலையங்களிலும் பஸ்கள் இயக்கப்பட வில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

மத்திய பஸ் நிலையத்திற்கு வந்த சில பஸ்களில் ஏறுவதற்கு பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்து ஏறினர். ஆனாலும் பயணிகள் கூட்டம் குறைந்தபாடில்லை.

நீண்டநேரமாக பஸ்கள் ஏதும் இல்லை என்பதால் ஆத்திரமடைந்த பயணிகள் பஸ் நிலையத்திற்குள் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் பஸ்களை உடனடியாக இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் அரசு போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் கண்டோன்மெண்ட் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை பயணிகள் கைவிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.