Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மக்கள் நீதி மய்யத்துடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி .

0

 

https://trichyxpress.com/

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, திமுக தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அதன்படி அதிமுகவில் பாமகவுடன் மட்டும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுகவை பொருத்தவரை இந்தியன் முஸ்லீம் லீக் கட்சியுடனும் மனித நேய மக்கள் கட்சியுடனும் விசிகவுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ளது.

இந்தநிலையில், திமுக காங்கிரஸ் கட்சியுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது வரை காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகள் கேட்டு வருவதாகவும் திமுக 18 லிருந்து 22 தொகுதிகள் வரை வழங்க முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த காங்கிரசுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த நாளை காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி உடன்பாடு இன்னும் எட்டப்படாத நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியுடன், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு திமுக எங்களை அழைக்கவில்லை. ஆனால் நாங்கள் மக்கள் நீதி மய்யத்துடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. 3-வது அணி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. தேர்தல் விதிமுறையை மீறியதாக ராகுல் காந்தி மீது பாஜக கூறியிருப்பதில் நியாயமில்லை. எந்தத் தேர்தல் விதிமுறையும் மீறப்படவில்லை. பாஜக இப்படித்தான் செய்யும் என்றார்.

முன்னதாக தினேஷ் குண்டுராவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், “தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். நாளையோ அல்லது நாளை மறுநாளோ நல்ல முடிவு எட்டப்படும். அதைத் தாண்டி தொகுதிப் பங்கீடு தொடர்பான ஊகங்கள், வதந்திகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது.

மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் பேசியதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது.

அதேபோல், ராகுல் காந்தி மீது பாஜக கொடுத்துள்ள தேர்தல் விதிமுறை மீறல் புகாரை தேர்தல் ஆணையம் நிச்சயம் நிராகரித்துவிடும். தமிழக மக்கள் ராகுல் காந்தி மீது அதிக பாசம் கொண்டுள்ளனர். அந்தப் பாசத்தை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.