திமுக வேட்பாளரின் விமர்சனத்துக்கு பதில் அளிக்கும் வகையில், நான் புகுந்த வீட்டிற்கு வந்த உரிமையில் வாக்கு கேட்கிறேன் என வாக்கு சேகரிப்பின் போது திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் பேச்சு…
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறக்கூடிய சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அந்தந்த கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ப.குமார் செந்தண்ணீர்புரம், வாழவந்தான் கோட்டை ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர், தமிழக அரசின் சாதனைகளையும் பல்வேறு நலத்திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறினார்.
2011 ஆம் ஆண்டுக்கு முன்பு திமுக ஆட்சிக்காலத்தில் தொடர் மின்வெட்டு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு விலைவாசி உயர்வு ஏற்பட்டது.
2011க்கு பிறகு அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தை ஒரு முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளது.
எதிர்க்கட்சி வேட்பாளர் கூறுகிறார் நான் கந்தர்வகோட்டையில் இருந்து வந்தவர் என்று, எனக்கு இது மாமனார் ஊர்.
இது எனக்கு புகுந்த வீடு. புகுந்த வீட்டில் தான் உரிமை அதிகம். அந்த உரிமையில் கேட்கிறேன்.
இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.
இதனை தொடர்ந்து வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும் தொண்டர்கள் சால்வை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்தும் வரவேற்றனர்.
பிரச்சாரத்தின் போது மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ் ராவணன், பாஜக நிர்வாகி சக்திவேல், இந்திரன் உள்ளிட்ட அதிமுக மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.