Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல். ஜோதிமணி எம்.பி. கடுமையான எதிர்ப்பு.

0

தமிழக சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதை அடுத்து, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.

தேர்தலில் போட்டியிட பலர் வாய்ப்பு கேட்டு கடுமையான நெருக்கடி கொடுத்ததால் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் ஒரு வழியாக வேட்பாளர் பட்டியலை தயார் செய்து டெல்லியில் உள்ள கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளனர். டெல்லியில் சோனியா தலைமையில் நடைபெறும் தேர்தல் குழு கூட்டத்தில் வேட்பாளர்களை இறுதி செய்து அறிவிக்க உள்ளார்கள்.

இந்நிலையில் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வேட்பாளர் தேர்வில் ஏராளமான குளறுபடிகள் நடந்து இருப்பதாக கூறி விஷ்ணு பிரசாத் எம்.பி. காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு ஏற்பட்டது.

வேட்பாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று ஜோதிமணி எம்பியும் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் ரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள், நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.

எனது தலைவர் ராகுல் காந்தி பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம்பி கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது ரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கட்சி தலைமைக்கு எதிராக ஜோதிமணி எம்பி கூறியுள்ள இந்த கருத்து கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.