திருச்சி மாநகராட்சியில்
ரூ. 80 லட்சத்தில் புனரமைக்கப்பட்டும்
பராமரிப்பின்றி இருண்டு கிடக்கும் பூங்கா
சமூக விரோத செயல்களால் பொதுமக்கள் அச்சம்
திருச்சி மாநகராட்சியில் கே கே நகர் பகுதியில் ரூ. 80 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பூங்கா, காவலர் இல்லாததாலும், முறையான பராமரிப்பின்றியும் இருண்டு கிடப்பதால், சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருவதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சி பொன்மலைக்கோட்டம் 37 ஆவது வார்டு பகுதியில் கே. கே . நகர் ஆபிரகாம் லிங்கன் தெருவில் அமைந்துள்ளது திருவள்ளுவர் பூங்கா.
இப்பூங்கா கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ. 80 லட்சத்தில் மிகவும் சிறப்பான வகையில் புனரமைக்கப்பட்டது. பொழுது போக்கு அம்சங்களுடன், நடைபயிற்சி செல்லவும், மேலும் பல்வேறு விதமான உடல் பயிற்சிகள் மேற்கொள்ளவும் ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்டது.
எனவே கே கே நகர் மட்டுமின்றி சுற்றுப்புறங்களைச் சேர்ந்தவர்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் இப்பூங்காவை பயன்படுத்தி வந்தனர்.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பூங்காவுக்கு கடந்த சில மாதங்களாக அனுமதி தடைசெய்யப்பட்டது. அதன் பிறகு அக்டோபர் மாதம் முதல் மீண்டும் பூங்காக்கள் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
என்றாலும் இப்பூங்கா கடந்த ஒரு மாத காலமாக முறையான பராமரிப்பின்றியும் புதர்கள் மண்டியும், செடி, கொடி, இலை தழைகளின் கழிவு மற்றும் சருகுகள் பூங்காவின் உள் பகுதியில் குவிந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், இங்கு ஒப்பந்த பணியில் இருந்த காவலர் ஒப்பந்தம் முடிந்து பணிக்கு வருவதில்லை.
பூங்காவை காலை மற்றும் மாலை இரு வேளையும் மாநகராட்சி பணியாளர்கள் வந்து திறந்தும் பூட்டியும் செல்கின்றனர். எனவே பூங்காவை பராமரிக்க ஆள் கிடையாது. மேலும், மாலை வேளையில் பூங்காவில் உள்ள மின் விளக்குகள் எரிவதில்லை.
எனவே இருட்டாக இருப்பதால் பொதுமக்கள் அங்கு செல்வது குறைந்துள்ளது. சென்றாலும் இருட்டியதும் வெளியே வந்துவிடுகின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சில சமூக விரோதிகள், மதுக்குடிக்கும் கூடாரமாகவும்(பாராக), விலை மாதர்களை அழைத்துச் செல்லும் இடமாகவும் பூங்காவை பயன்படுத்தி வருகின்றனர்.
செடி கொடி, சருகுகள் அதிகரித்துள்ளதால், கொசு உற்பத்தி மையமாகவும் பூங்கா திகழ்கின்றது. சுற்றுப்புறத்தைச் சேர்ந்த வீடுகளுக்கு இங்கிருந்து கொசுக்கள் அதிகளவில் படையெடுத்து வருகின்றன.
இது குறித்து கே சாத்தனூரில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அக்கம் பக்கத்தினர் கூறிவருகின்றனர்.
இது குறித்து, அம்பிகை நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஏ. வீரையா கூறுகையில்,
திருச்சி மாநகராட்சியைப் பொறுத்த வரையில், கடந்த சில மாதங்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.
பிற அடிப்படைத் தேவை தொடர்புடைய பணிகளில் அக்கறை செலுத்தாமல் காலம் தாழ்த்துவது தொடர்ந்து வருகின்றது. இதற்கு காரணமும் தெரியவில்லை. சாலை வசதிகள் குறித்து குறிப்பிட்டால், பாதாள சாக்கடை (புதைவடிகால்) பணிகளை காரணம் காட்டி விடுகின்றனர். கே கே நகரை ஒட்டியுள்ள விமான நிலையப் பகுதிகளில் பல இடங்களில் புதர்கள் மண்டிக் கிடப்பது குறித்தும் தகவல்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது.
அதுபோல குப்பைகளை பெறுவதிலும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. வாரம் இருமுறை குப்பைகளை பெற்றுக்கொண்டால் கூட பரவாயில்லை. ஆனால் வாரம் ஒரு முறைதான் குப்பை வண்டி வருகின்றது. இதனால் அழுகும் தன்மையுள்ள குப்பைகளால் வீடுகளில் துர்நாற்றம் வீசுகின்றது. எனவே வேறு வழியில்லாததால் பொதுமக்கள் கண்ட இடங்களில் குப்பைகளை பொட்டலம் கட்டி வீசுகின்றனர். அவற்றை தெரு நாய்கள் கடித்து குதறுவதால் எங்கு பார்த்தாலும் குப்பைகள் கிடக்கின்றன.
திருச்சி மாநகர் முழுவதும் தெருவுக்கு பதினைந்து இருபது தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இதனால் குழந்தைகளும் முதியவர்களும் தெருவில் நடப்பதற்கு பயப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்துவதற்கு பல முறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், பராமரிப்பின்றி கிடக்கும் இப்பூங்கா குறித்தும் அக்கம் பக்கத்தினர், மாநகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை தகவல் தெரிவித்ததாக கூறுகின்றனர். ஆனால் உரிய நடவடிக்கை இல்லை. பூங்கா பராமரிப்பின்றியும், பாதுகாப்பின்றியும் உள்ளது. எனவே மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததால், மக்கள் பிரச்னைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவிக்க முடிவதில்லை, மாநகராட்சி அலுவலர்களை மட்டுமே நம்ப வேண்டிய நிலை உள்ளது என்றார்.
மேலும் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் மாநகரில் பல்வேறு கலைநயம் மிக்க அழகு படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல பூங்காக்கள் விலை மதிப்புள்ள உடற்பயிற்சி சாதனங்களுடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. மேலும் பூங்காக்களும் திருச்சியில் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சில பூங்காக்கள் பராமரிப்பற்ற நிலையில் காணப்படுவதால் அங்கு சமூக விரோத செயல்கள் நடைபெற வழி வகுக்கின்றது. மதுக்குடிக்க தொடங்கியுள்ள நிலை மாறி, பின்னர் மாது, அடிதடி, திருட்டு என பல்வேறு சம்பவங்களுக்கும் வழிவகுக்கும். எனவே அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பொது மக்களின் விருப்பமாகும்.