தமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்
தமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வுகளுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 16-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதிவரை அரியர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. அப்போது தமிழக அரசு 10-ம் வகுப்பு மாணவர்களின் பொது தேர்வு மற்றும் பிற வகுப்பு மாணவர்களின் இறுதி தேர்வுகளையும் ரத்து செய்தது. பின்னர் கல்லூரி மாணவர்களின் கடைசி செமஸ்ட்டர் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் பொறியியல் கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்யும் தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என யுஜிசி தெரிவித்திருந்தது. பின்னர் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் அரியர் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கினார். மேலும் அரியர் தேர்வு அட்டவணை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய பல்கலைக்கழகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகளுக்கான அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது.