திருச்சி காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மையம் திறப்பு .
திருச்சி தென்னூர் காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி சில தினங்களுக்கு முன்பு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. இந்த வகையில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டு வந்த இந்த தடுப்பூசி ஒருசில தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் திருச்சி காவிரி மருத்துவமனைக்கு கரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து திருச்சி தென்னூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மையம் திறக்கப்பட்டது.
காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், மேலாண்மை இயக்குனர் செங்குட்டுவன் ஆகியோர் புதிய மையத்தை திறந்து வைத்தனர்.
அப்போது மேலாண்மை இயக்குனர் செங்குட்டுவனுக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பின் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், மேலாண்மை இயக்குனர் செங்குட்டுவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி காவேரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என முன் களப்பணியாளர்கள் 2,200 பேர் உள்ளனர். இவர்களில் தினமும் 100 பேர் வீதம் தடுப்பு ஊசி செலுத்தப்படும். இதைத்தொடர்ந்து அரசு வழிகாட்டுதலின்படி அரசு சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும்.
தடுப்பூசி என்பது 75 சதவீதம் மட்டுமே பலனளிக்கக் கூடியதாகும். அதற்காக அதை புறந்தள்ளிவிட முடியாது. இந்த கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டால் தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்றனர்.