லிங்கா நகர் மீன் மார்க்கெட்டில் :
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன்
சில்லரை வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்க வேண்டும்.
திருச்சி உறையூர் லிங்கா நகரில் புதிதாக தொடங்கப்பட்ட மீன் மார்க்கெட்டில் கழிவுகளை அகற்றி அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
திருச்சி, பீமநகர் கூனி பஜார் பகுதியில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி, புத்தூரில் அமைக்கப்பட்ட (அப்போதைய) புதிய வணிய வளாகத்துக்கு மாற்றப்பட்டது. இங்கு அமைக்கப்பட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகளில் காய்கனிகள் கடைகள் அமைந்திருந்தாலும், மீன்கள், ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி கடைகளே பிரபலமாக இருந்தது.
குறிப்பாக மீன்கடைகள்தான் அதிகளவில் பிரபலமானது எனவே இதற்கு புத்தூர் மீன்சந்தை என்றே பெயராகிப்போனது.
இங்குள்ளகடைகளுக்கு நாகை, வேதாரண்யம், கோடியக்கரை, மீமிசல், தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், சில வேளைகளில் கேரளத்திலிருந்தும் லாரிகள் மூலம் மீன்கள் தினமும் கொண்டுவரப்பட்டு அதிகாலை முதலே விறுவிறுப்பாக வியாபாரம் நடப்பது வழக்கம். மீன் சந்தையை சுற்றிலும் நாளடைவில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் எழுந்தன. எனவே, மீன் சந்தையில் கழிக்கப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. எனவே, புத்தூரில் இருந்து மீன்மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இதனையடுத்து, மீன் மற்றும் இறைச்சி சந்தையை உறையூர் பகுதியில் உள்ள லிங்கா நகரில் புதிதாக அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.
இதனையடுத்து, திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட 60 ஆவது வார்டு குழுமணி பிரதான சாலையில், லிங்கா நகரில் உள்ள காசிவிளங்கி பகுதியில் ரூ.3 .32 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டது.
இதில் 8 மொத்த விற்பனை மீன் கடைகளும், 25 சில்லரை விற்பனை மீன்கடைகளும் என மொத்தம் 33 கடைகள் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, மீன்களை வெட்டி சுத்தம் செய்து (கழுவிக்) கொடுப்பதற்கென்று தனியாக மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 9 ஆம் தேதி முதல் மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட் உறையூர் லிங்கா நகருக்கு மாற்றம் செய்யப்பட்டு, அங்கு விற்பனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
புத்தூர் வணிக வளாகத்தில் சில்லரை வியாபாரிகளுக்கான கடைகளும் மார்க்கெட் உள்ளேயே அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் உறையூர் லிங்கா நகரில் உள்ள மீன் சந்தையில், சில்லரை வியாபாரிகளுக்கென 25 கடைகள் அமைக்கப்பட்டும் அவை வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. மாறாக சில்லரை வியாபாரிகள் மார்க்கெட்டில் திறந்த வெளியிலேயே வைத்து மீன்களை வியாபாரம் செய்கின்றனர். மேலும் மீன் கழிவுகளும் அருகிலேயே கிடப்பதுடன், மீன் கழுவும் தண்ணீரும் வெளியேற வழியின்றி வியாபாரிகளை (கடைகளை) சுற்றியே தேங்கி நிற்கின்றன.
இதனால் மீன் மார்க்கெட்டில் கால் வைக்க முடியாத வகையில், சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் கால்கள் புண்ணாகி காணப்படுகின்றது.
சில்லரை வியாபாரிகளுக்கென அமைக்கப்பட்ட கடைகள் மொத்த வியாபாரிகளுக்கான அலுவலகமாக இயங்க தேவை என கோரிக்கை விடப்பட்டுள்ளதால், அவற்றை சில்லரை வியாபாரிகளுக்கு வழங்காமல் பூட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக இங்கு மீன்களை வெட்டி சுத்தம் செய்து தருபவர்களின் நிலை படுமோசமாக உள்ளது. ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளி வாலிபர் சாக்கடையில் அமர்ந்து மீன் வெட்டி தரும் பணியை மேற்கொண்டு வருகிறார். அங்கு வரும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஆபாச வார்த்தைகளால் இவரைப்போன்றவர்களை திட்டி வருகிறார்களாம்.
இதனால் தரைக்கடைகள் அமைக்கப்பட்டு, அங்கே மீன்கள் வெட்டும் கழிவுகளும் தேங்கி சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுகள் மற்றும் கழிவு நீர் வெளியேற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மேலும் சில்லரை வியாபாரிகளுக்கு கடைகள் அமைக்கப்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனுவும்அளித்துள்ளனர். மேலும் போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும் இந்நிலையிலேயே மீன் சந்தை இயங்கி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.