Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி 33 வது வார்டின் அவல நிலை.அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் சொந்த தொகுதி. கண்டுகொள்ளாத வட்ட செயலாளர் மலையப்பன்.

0

மோசமான நிலையில் 33வது வார்டு சுப்ரமணியபுரம் பகுதி.

கண்டு கொள்வாரா தொகுதி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ?

திருச்சி மாநகராட்சியில் சுமார் 65 வார்டுகள் உள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தூய்மை நகரங்களின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது திருச்சி மாநகராட்சி. ஆனால் அதற்கு நேர்மாறாக தற்போது மிகவும் அசுத்தமான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

திருச்சி மாநகராட்சியின் புதிய உத்தியான சாலைகளில் குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டது, குப்பைகள் தெருவில் கொட்டப்படுவது கட்டுப்படுத்த இல்லை.

பல மடங்கு அதிகரிக்கவே செய்துள்ளது. குப்பை சேகரிக்க ஆட்கள் வராவிடில், சாலையோரங்களில் குப்பைகளை ஆங்காங்கே போட்டுவிட்டு செல்கின்றனர் மக்கள்.

ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஒருபுறம் நடைபெற, பாதாள சாக்கடை பணிகள் மறுபுறம் நடைபெற,  மற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் பூஜ்ஜியமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் சொந்த தொகுதியான திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி 33வது வார்டில் உள்ள வள்ளுவர் தெருவில் (60க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் ஒர் பகுதியில் மட்டும்) பல வருடங்களுக்கு முன்பு சதுரக்கற்க்கலால் அமைந்த சாலையால் தற்போது முதியவர்கள் மற்றும் குழந்தைகளால் நடக்கக் கூட முடியாத நிலையில் சாலைகள் உள்ளன. இந்த பகுதியை சுற்றி உள்ள அனைத்து தெருக்களிலும் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வள்ளுவர் தெருவுக்கும் மட்டும் சாலை அமைக்க மாநகராட்சியில் நிதி இல்லை என கூறப்படுகிறது.

இந்தப் பகுதியில் உள்ள ஔவையார் தெரு, பாண்டியன் தெரு, கென்னடி தெரு, கணபதி பிள்ளையார் தெரு, வள்ளுவர் தெரு, கருப்பையா தெரு, காந்திநகர், ரங்கா நகர், இளங்கோ தெரு, சுப்ரமணியபுரக்கோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் ரஞ்சிதபுரம் பஸ் நிறுத்தத்தில் தான் பஸ் ஏற வேண்டும். ஆனால் இங்கு ஓர் பஸ் நிறுத்தம் கூட இதுவரை அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பஸ் நிறுத்தமும் கடந்த மழையில் கீழே விழுந்து விட்டது)

திருச்சியில் தற்போது பஸ் நிறுத்தம் இருக்கும் அதே இடத்தில் கூட புதிய பஸ் நிறுத்தங்கள் அமைச்சரின் நிதியில் பல லட்சம் செலவில் நிறுவப்பட்டு வருகின்ற நிலையில் தனது சொந்த தொகுதியில் உள்ள இரஞ்சிதபுரம் பொது மக்களை அமைச்சர் கண்டுகொள்ளாதது ஏன் என தெரியவில்லை.

இதே வார்டில் உள்ள ஔவையார் தெரு அருகில் கிட்டத்திட்ட கடந்த 5 வருடங்களாக குப்பைகளை அங்கு உள்ள ரயில்வே மைதானத்தில் குப்பைகளை பகுதி மக்கள் கொட்டி வருகின்றனர்.
ஜி கார்னர் பகுதியில் இந்த குப்பைகளையும் எடுக்க வேண்டுமே என்றால் அது  ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது என கைவிரித்து விடுகின்றனர்.

மேலும் 33வது வார்டு ஔவையார் தெரு பகுதியில் இதுவரை குப்பை வண்டிகளும் வரவில்லை என்றும் சாக்கடைகள் அடைத்துக் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது இல்லாமல் ரயில்வே இடத்தில் கொட்டப்படும் குப்பைகளால் அப்பகுதிவாசிகள் நோய் தொற்று பரவும் அபாயமும், அவற்றை அப்பகுதியில் ஒரு சிலர் அப்புறப்படுத்தும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவர் 33 வது வட்ட செயலாளர் மலையப்பனிடம் எடுத்து கூறி 10 நாட்களுக்குள் அனைத்து வேலையும் முடித்து வேண்டும் என கூறி உள்ளார். ஆனால் வள்ளுவர் தெரு உள்ளிட்ட தெருக்கள் அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் அவருக்கு வராது எனவே இப்பகுதி மக்களுக்கு நல்லது செய்து என்ன என்ற எண்ணத்தில் அவர் அமைச்சரின் சொல்லை கண்டுகொள்ளவே இல்லை.

இவர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உடனும்,இவரது மனைவி மகாலட்சுமி மலையப்பன் அமைச்சர் வளர்மதி உடனும்,இவர்களது மகன் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் அவர்கள் உடனும் இருப்பதால் யார் என்ன சொன்னாலும் நான் தான் வட்ட செயலாளர், நான்தான் அடுத்த கவுன்சிலர் என்ற மிதப்பில் செயல்பட்டு வருகிறார் அதிமுக 33வது வட்ட செயலாளர் எம்.டி.மலையப்பன்.

எனவே அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்கள் காலம் தாழ்த்தாமல் 33வது வார்டு மக்களை கண்டு கொள்வாரா என்ற ஏக்கத்தில் உள்ளனர் அப்பகுதி பொது மக்கள்

Leave A Reply

Your email address will not be published.