திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ் செங்குளம் காலனியைச் சேர்ந்தவர்கள் அடிப்படை வசதி செய்துதரக்கோரி குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர்.
திருச்சி, பாலக்கரை வேர்ஹவுஸ் செங்குளம் காலனியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு உள்ளது. மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கென்று இங்கு கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பில் 685 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த குடியிருப்புப் பகுதியில் 19 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிசை மாற்று வாரிய கட்டுப்பாட்டிலிருந்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாநகராட்சி வசம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போதுவரை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், இக்குடியிருப்பில் உள்ள தெருவிளக்குகள் கடந்த சில காலமாக எரியவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து பா ஜ க திருச்சி மாநகர பாலக்கரை மண்டலத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் அக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள், பாலக்கரை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகத்தின் முன் அமர்ந்து தர்ணா செய்தும், அரிக்கேன் விளக்கு ஏற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த குடிசை மாற்று வாரியத் துறை நிர்வாகப் பொறியாளர் மற்றும் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் குடியிருப்பு பகுதியில் மேற்கொண்ட ஆய்வில், தெரு விளக்குகள் எரிய பயன்படுத்தப்படும் மின்சார ஸ்விட்சை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்திருப்பது தெரியவந்தது. இதை சரிசெய்து ஓரிரு நாள்களில் தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.