செம்பரபாக்கம் ஏரி திறப்பு. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்.
செம்பரபாக்கம் ஏரி திறப்பு. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்.
நிவர் புயல் காரணமாக நேற்று முதல் பலத்த மழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரத்து அதிகரிக்கும் பகுதியான ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மழை பெய்யாததால் ஏரிக்கு நீரானது குறைவாக வந்தது.. இதனால் முழு கொள்ளளவை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் உயரம் 21.55 அடி, மொத்த கொள்ளளவு 2999 மில்லியன் கன அடி, நீர்வரத்து 4027 கன அடியாக உள்ளது. இதனிடையே மழை காரணமாக இன்று நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் இன்றைய தினம் முழு கொள்ளளவை எட்டும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளவு 24 அடியாகும். 22 அடியை எட்டியுடன் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். இதன்படி ஏரிக்கு நீர் வரத்து உயர்வதால் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து முதல்கட்டமாக ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது . படிப்படியாக ஏரிக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்படும்
2015ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுவதால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. எனினும் அச்சப்படும் அளவிற்கு நிலைமை இப்போது இல்லை என்றும், அடையாற்றில் 50 ஆயிரம் கனஅடி நீரை வெளியற்றும் அளவுக்கு பலமாக கரைகள் உள்ளது என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்ட அறிவிப்பில், இன்று மதியம் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படவுள்ளதால் காவலூர்,குன்றத்தூர். நத்தம், திருமுடிவாக்கம். திருநீர்மலை வழிநிலை மேடுபகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.